வால்பாறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட கோவை தங்கம் மயங்கி விழுந்தார்

வால்பாறை: வால்பாறையில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பிசாரத்தில் ஈடுபட்ட கோவை தங்கம் உடல்நலக்குறைவால் திடீரென மயங்கி விழுந்தார். உடல் நலம் தேறியதும் மீண்டும் பிரசாரத்தில் ஈடுபட்டார். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பாக முன்னாள் வால்பாறை எம்எல்ஏவும், இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொருளாளருமான ஆறுமுகம்  போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, சமீபத்தில் தமாகாவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை தங்கம், தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜ் ஆகியோர் நேற்று கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

 திமுகவில் இணைந்தபின்னர், முதல் முறையாக வால்பாறைக்கு நேற்று வந்த கோவை தங்கத்திற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அஞ்சலகம் முதல் காந்தி சிலை வரை திமுகவினருடன் கோவை தங்கம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மீண்டும் திமுக ஆட்சி அமைந்ததும் தோட்ட தொழிலாளர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்படும்’’ என்றார்.  பேசி முடித்ததும் கோவை தங்கம் திடீரென மயங்கி விழுந்தார். கட்சியினர் அவரை மீட்டு சிகிச்சைக்கு காரில் கோவை அழைத்து சென்றனர். வழியிலேயே அவர் உடல் நலம் தேறினார். குறைந்த சர்க்கரை அளவால் அவர் மயங்கி விழுந்தது தெரிய வந்தது.

Related Stories: