டெல்லியிடம் எடப்பாடி சரணடைந்து உள்ளார்: சென்னை பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பேசியபோது தமிழக முதல்வர், தமிழகத்தின் வரலாற்றை மறந்து டெல்லியிடம் சரணடைந்து கிடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். சென்னை வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா, சைதாப்பேட்டை தொகுதி திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன், சோளிங்கர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகை ஆகியோரை ஆதரித்து மாபெரும் பொதுக்கூட்டம் சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் நேற்று நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது: தொன்மையான தமிழ் மொழி, அழகிய கலாசாரம், பண்பாடு கொண்ட தமிழகத்தின் பிரதிநிதியான தமிழக முதல்வர் அமித்ஷா, மோடியின் கால்களில் வீழ்ந்து கிடப்பது. அதை பார்க்கும்போது எனக்கு கோபம் வருகிறது. தமிழகத்தில் இருந்து ஆட்சி செய்யும் தமிழ்நாடு வேண்டும். டெல்லியில் இருந்து ஆட்சி செய்யும் தமிழ்நாடு வேண்டாம். தமிழக முதல்வருக்கு பாஜவினர் காலில் விழ விருப்பமில்லை, எந்த மானமுள்ள தமிழனும் அதை விரும்புவதில்லை. ஆனால் அவர் நேர்மை இழந்ததன் காரணமாக காலில் விழுந்து கிடக்கிறார். மக்களிடம் இருந்து சுரண்டிய பணத்தால் நேர்மை இழந்து காலில் விழுந்து கிடக்கிறார்.

தமிழக அரசியலுக்கு ஒரு பெரிய மாற்றம் தேவைப்படுகிறது. தமிழகம் பெரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறது. திறமையான, அறிவுசார்ந்த இளைஞர்களை கொண்ட ஒரு மாநிலம், வேலைகள் இல்லாமல் தவிக்கிறது. தமிழகத்திற்கு ஒரு சிந்தனை, வழிமுறைகள், புதுமை தேவைப்படுகிறது. அந்த புதிய விஷயங்கள் நம்முடை கலாச்சாரம், பண்பாட்டில் காலூன்றியதாக இருக்க வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் வரக்கூடிய இந்த அரசாங்கம் இதை முழுமையாக செய்யும். தமிழக மக்களை மதிக்ககூடிய ஒரு அரசாக இது அமையும். டெல்லியால் கட்டுபடுத்தக்கூடிய அரசாக இது இருக்காது. தமிழ்நாட்டின் சிந்தனை மற்றும் பண்பாட்டின் மீது ஒரு முழு தாக்குதால் துவக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை குறைத்து மதிப்பிடாதீர்கள், இந்த தாக்குதலுக்கு பின்னாடி நிறைய பண பலம் உள்ளது. இதற்கு துவக்கப்புள்ளி போட்டது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜ, அவர்களுக்கு மண்டியிடும் தமிழகம் தேவை. தமிழகத்தை அரவவணைத்தால், தமிழகம் உங்களை அரவணைக்கும். தமிழக மக்களுக்கு நீங்கள் ஒரு பகுதி அன்பு கொடுத்தால், அவர்கள் இரு பகுதி அன்பு கொடுப்பார்கள். இந்த மரியாதையான உறவை தவிர வேறு எதையும் நான் எதிர்பார்க்கவில்லை.

எனக்கு தமிழ் தெரியாது, ஆனால் தமிழ்மக்களின் மனது எனக்கு புரியும். தமிழை கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் உங்களை நல்லா புரிந்துகொள்வேன் என்று நினைக்கிறேன். மெதுவாக தமிழை கற்றுகொண்டு வருகிறேன். சில இலக்கியங்களை படித்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆங்கிலத்தில் பேசியதை, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், காங்கிரஸ் பிரமுகருமான சசிகாந்த் செந்தில் மொழி பெயர்த்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: