சினிமா நட்சத்திரம் என்பதைவிட உங்கள் வீடுகளில் ஒரு விளக்காக இருக்க ஆசைப்படுகிறேன்..! கோவையில் கமல்ஹாசன் பிரச்சாரம்

கோவை: 10 ஆண்டுகளில் செய்யாததை 100 நாட்களில் செய்து முடிப்பேன் என்று கோவையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சினிமா நட்சத்திரம் என்பதைவிட உங்கள் வீடுகளில் ஒரு விளக்காக இருக்க ஆசைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர்.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, அவர் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தான் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன், எனது தொகுதியில் குடியிருக்க வீடு தான் வேண்டும். அதை வாடகைக்கும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

ஆனால், நான் எப்போழுதும் இருக்கும் இடம் உங்கள் மனமாக இருக்க வேண்டும். சிறுத்தொழில்களை ஊக்குவிக்க இருக்கிறோம். 50 லட்சம் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவோம். குடிநீரும், சாக்கடையும் கலந்துள்ளது என மக்கள் கூறுகின்றனர். அது எவ்வளவு பெரிய விஷம். அந்த விஷத்தை பரவவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் நீங்க வேண்டும். கோவையை இந்தியாவின் நம்பர் 1 நகரமாக மாற்றுவது எனது ஆசை. அதை மாற்ற பிரதமர் தேவையில்லை ஒரு எம்.எல்.ஏ. போதும். இந்தியாவின் தொழில்நகரமாக இருந்த கோவை தற்போது வெறும் நகரமாக உள்ளது அதை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நான் பாடுபடுவேன்’ என்றார்.

Related Stories: