வங்கதேச சுற்றுப்பயணத்தில் மதுவா சமூகத்தினரை சந்தித்த பிரதமர் மோடியின் விசாவை ரத்து செய்யுங்கள்: தேர்தல் விதிமீறியதாக மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு

தாகா: வங்கதேச பயணத்தில் பிரதமர் மோடி மதுவா சமூகத்தினர் மத்தியில் உரையாற்றியதால், மேற்கு வங்க அரசியலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் விதிமீறியதாக மோடியின் விசாவை ரத்து செய்ய வேண்டுமென மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். கொரோனா ஊரடங்குக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசத்துக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. சுற்றுப்பயணத்தின் முதல்நாளான வெள்ளிக்கிழமையன்று வங்கதேசத்தின் சுதந்திர பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நேற்று ஐஸ்வரிபுர் கிராமத்தில் உள்ள பழமையான ஜேஷோரேஸ்வரி காளி தேவி கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்துக்களால் வழிபடப்படுகிறது. மேற்கு வங்கத்தின் எல்லையில் அமைந்துள்ள இந்த காளி கோயிலில், கொரோனாவிலிருந்து உலகம் விடுபட வேண்டிக்கொண்டதாக இதுகுறித்து பிரதமர் தெரிவித்தார்.

பின்னர், கோபால்கஞ்ச்சின் ஒரகண்டியில் உள்ள கோயிலில் வழிபட்ட பிரதமர் மோடி, அங்குள்ள மதுவா சமூகத்தினர் மத்தியில் பேசினார். ‘‘ஒரகண்டியில் வந்ததும் இந்தியாவில் மதுவா சமூகத்தினர் மத்தியில் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது’’ என்று பிரதமர் மோடி பேசினார். இந்துக்களான மதுவா சமூகத்தினர் ஏராளமானோர் மேற்குவங்கத்தில் வசிக்கின்றனர். மேற்குவங்கத்தில் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நடக்கும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்ட விவகாரங்களால் இஸ்லாமியர்கள் ஓட்டு திரிணாமுலுக்கு சென்று விடும் என்பதால், மதுவா உள்ளிட்ட இந்துக்கள் ஓட்டுக்களை கணிசமாக கைப்பற்ற பாஜ குறிவைத்துள்ளது. சிஏஏ, என்ஆர்சி போன்றவைகளுக்கு மதுவா சமூகத்தினர் ஆதரவாக உள்ளனர். இதனால்  மேற்கு வங்க தேர்தலை குறிவைத்தே பிரதமர் மோடி மதுவா சமூகத்தினரை சந்தித்திருப்பதாக மேற்கு வங்கத்தில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு சென்று அங்கு மேற்குவங்கம் குறித்து பாடம் எடுக்கிறார். இது முழுமையான தேர்தல் நடத்தை விதிமீறலாகும். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது வங்கதேசத்தை சேர்ந்த நடிகர் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்றார். இது குறித்து வங்கதேச அரசுடன் பாஜ பேசியது. மேலும், அந்த நடிகரின் விசாவை ரத்து செய்தது. தற்போது பிரதமர் மோடி வங்கதேசத்திற்கு சென்று ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களிடம் வாக்கு கேட்கின்றனர். அப்படியெனில் பிரதமரின் விசாவை ஏன் ரத்து செய்யக்கூடாது?. இது குறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம்’ என்றார்.

ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடத்தில் அஞ்சலி

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படுகிற ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நினைவிடம் சென்று மலரஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி. தென்மேற்கு வங்கதேசத்தில் அமைந்துள்ள துங்கிபரா பகுதியில் இந்த நினைவிடம் அமைந்துள்ளது.

Related Stories: