சாலை விரிவாக்க பணியின் போது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விநியோக பைப்பில் உடைப்பு-வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அவதி

பேர்ணாம்பட்டு :  பேரணாம்பட்டு அடுத்த மிட்டப்பள்ளி பேருந்து நிலையம் அருகே ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வினியோகிக்கும் பைப் உடைப்பால் அடுத்த பத்து நாட்களுக்கு பேரணாம்பட்டு மக்களுக்கு தண்ணீர் வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த இரண்டு மாதங்களாக பேரணாம்பட்டு எல்லைக்குட்பட்ட ஓணான் குட்டையில் இருந்து பேரணாம்பட்டு வரை சாலை விரிவாக்கம் பணி நடைபெற்று வருகின்றது. அப்பகுதிகளில் உள்ள ராட்சத புளிய மரங்களை அகற்றும் பணி நடந்து வருகின்றது.

அவ்வாறு ராட்சத மரங்களை அகற்றும்போது கடந்த இரண்டு மாதங்களாகவே ஆங்காங்கே பைப்புகளில் உடைப்பு ஏற்பட்டு வருகின்றது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக மூன்று இடங்களில் பைப் சேதமடைந்தது. அதனை சரி செய்து வந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு பெரிய மரத்தை அகற்றும் போது மிட்டப்பள்ளி சுற்றியுள்ள நான்கு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் சிறிய பிவிசி பைப்பும், பேரணாம்பட்டு நகரவாழ் மக்களுக்கு வினியோகிக்கும் பெரிய பைப்பும் சேதமடைந்துள்ளது.

எனவே பைப்புகளை சரி செய்ய சுமார் 5 லிருந்து 10 நாட்கள் வரை ஆகும் என ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வாரிய ஊழியர்கள் சாலை விரிவாக்கத்தில் ஈடுபட்டுள்ள சாலை விரிவாக்க ஊழியர்களிடம் கேட்டதற்கு, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நடக்க உள்ள நிலையில் சாலை பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றன. இதனால் பைப் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: