கண்ணகி கோயிலில் ஆகம விதிப்படி சித்திரை முழுநிலவு விழா நடத்தவேண்டும் -அனுமதிக்க கோரி கலெக்டரிடம் மனு

கூடலூர் : கண்ணகி கோயிலில் ஆகம விதிப்படி சித்திரை முழுநிலவு விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும் என கம்பம் கண்ணகி அறக்கட்டளையினர் தேனி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.  2000 ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டு குலசேகர பாண்டியன், ராஜராஜ சோழ மன்னர்களால், புனரமைக்கப்பட்ட மங்கலதேவி கண்ணகி கோயில், தற்போது கேரள வனத்துறையினரின் கெடுபிடிகளால் பூஜை நடைபெறாமல் சிதிலமடைந்து கிடக்கிறது.

இக்கண்ணகி கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு விழா நடக்கும். கடந்தாண்டு  கொரோனா தாக்கத்தால் இந்த விழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு வரும் ஏப்.27ல் சித்திரை பவுர்ணமி நாளன்று கண்ணகி கோவிலில் சித்திரை முழுநிலவு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள புதர், முட்செடிகளை அகற்றக்கோரி, தேனி மாவட்ட கலெக்டர் கிருஷ்ணன் உண்ணியிடம் கம்பம் கண்ணகி அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் உட்பட அறக்கட்ளை நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘தமிழகம், கேரள மாநிலங்களில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களிலும் ஆகம விதிப்படி பூஜை, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. கேரளத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் அனுமதிக்கப் படுகின்றனர். ஆனால், கேரள வனத்துறையினர் கண்ணகி கோயிலில் மட்டும் ஆகம விதிப்படி பூஜை நடத்தவிடாமல் தடுக்கின்றனர்.

எனவே, வருகிற ஏப்.27ம் தேதி (செவ்வாய்க்கிழமை) சித்திரா பவுர்ணமியன்று கண்ணகி கோயிலில் ஆகம விதிப்படி விழாவை நடத்த அனுமதிக்க வேண்டும். மேலும், கோயில் வளாகத்தில் வளர்ந்துள்ள மரம் செடிகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விழா நாளான அன்று கடந்த ஆண்டுகளைப்போல் தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கவும், சுற்றுலாத்துறை மூலம் அரசுநிதி ஒதுக்கீடு செய்துகொடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளனர்.

Related Stories: