தேர்தல் பாதுகாப்பு பணியில் 5000 பேர் குமரிக்கு மேலும் 6 கம்பெனி துணை ராணுவம் வருகை: பதற்றமான பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் பேர் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணிக்காக மேலும் 6 கம்பெனி துணை ராணுவத்தினர் இன்னும் சில தினங்களில் குமரி மாவடடம் வர உள்ளனர். குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுடன், கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 631 இடங்களில் 2,243 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 274 வாக்குசாவடிகள் பதற்றமானவை என்றும், 5 இடங்களில் உள்ள 14 வாக்குசாவடிகள் மிகவும் பதற்றமானவைகள் என்றும் காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.  பதற்றமான மற்றும் மிக பதற்றமான வாக்குசாவடிகளில் துணை ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறையினர் செய்து வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் போலீசார், துணை ராணுவத்தினர்,  ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் என்.சி.சி. படையினர் என சுமார் 5 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக ஏற்கனவே ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் வந்துள்ளனர். தற்போது இவர்கள், பறக்கும் படையினருடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்னும் கூடுதலாக 6 கம்பெனி துணை ராணுவத்தினர் வர உள்ளனர். தற்போது அவர்கள் சென்னையில் உள்ளனர். இன்னும் சில தினங்களில் இவர்கள் குமரி மாவட்டம் வர உள்ளனர். பின்னர் இவர்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது. துணை ராணுவத்தினர் தங்குவதற்கான ஏற்பாடுகளை, காவல்துறையினர் செய்து வருகிறார்கள்.

இதே போல் முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற போலீசாருக்கும் எஸ்.பி. பத்ரி நாராயணன் அழைப்பு விடுத்துள்ளார். இவர்களின் சிரமத்தை போக்கும் வகையில் இவர்களின் இருப்பிடம் அருகிலேயே, பாதுகாப்பு பணி இவர்களுக்கு வழங்கப்படும், அந்தந்த காவல் நிலையத்திலேயே தேர்தலுக்கான ஊதியமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆர்வத்துடன் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வு பெற்ற போலீசார் பணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே மக்களிடம் பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதற்கு உறுதி அளிக்கும் வகையிலும் பதற்றமான மற்றும் மிக பதற்றமான பகுதிகளில் காவல்துறை சார்பில் துணை ராணுவம் மற்றும் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: