முதல்வர், அமைச்சர்களின் ஊழல் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம்..! ஆட்சி முடியும் நேரத்திலும் ரூ.3,000 கோடி ஊழல்: கிருஷ்ணகிரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சேலம்: ஆட்சி முடியும் நேரத்திலும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்புகூட ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வர், அமைச்சர்கள் செய்த ஊழல்கள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பழைய பேருந்து நிலையத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தலுக்கு மட்டுமல்ல, எந்த நேரத்திலும் உங்கள் சுக, துக்கங்களில் பங்கேற்று, எந்த சூழலிலும் உடன் இருப்பவன் என்ற உரிமையோடு உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். இந்த மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை தந்தவன் என்ற உரிமையும் எனக்கு உள்ளது. ஆனால் இந்த மாவட்டத்தில் அமைச்சரே இல்லாமல் ஒருவர் அமைச்சராக செயல்படுகிறார்.

அவரது பெயர் 30 பர்சன்ட் முனுசாமி. ஜெயலலிதா இருந்த போது நடந்த பொதுக்குழுவில் கட்சியினர் அவரை இப்படித்தான் அழைத்தனர். அதனால் அவரது மந்திரி பதவி பறிபோனது. ஆனால் அந்த அம்மையார் இறந்த பிறகு அவருக்கு புதுவாழ்வு கிடைத்துள்ளது. 2018ல் கிருஷ்ணகிரியில் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவர் உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் ஓபிஎஸ்சுடன் இணைந்து தர்மயுத்தம் நடத்தவும் தூண்டிவிட்டார். பிறகு பழனிசாமியையும், பன்னீரையும் மிரட்டி எம்பி பதவி வாங்கினார். அதன்பிறகு வாய்திறக்கவே இல்லை. மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்னும் நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், தற்போது எம்எல்ஏவாக போட்டியிடுகிறார். அப்படிப்பட்டவரை நீங்கள் தோற்கடிக்க வேண்டாமா? ஜெயலலிதா ஆட்சியை விட தற்போது அதிக ஊழல் நடக்கிறது.

எப்படியெல்லாம் ஊழல் நடந்துள்ளது என்பது குறித்து கவர்னரிடம் தெளிவான பட்டியலை கொடுத்துள்ளோம். பொதுப்பணித் துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பழனிசாமி, அனைத்து டெண்டர்களையும் தனது சம்பந்திக்கும், அவரது சம்பந்திக்கும் கொடுத்துள்ளார். இதுகுறித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் சென்று அதற்கு தடை வாங்கினார் பழனிசாமி. அதனால்தான் தற்போது அவர் முதல்வராக இருக்கிறார். இல்லாவிட்டால் சிறையில் இருந்திருப்பார். ஊழலுக்காகவே நடத்தப்படுவது தான் அதிமுக ஆட்சி.ஆனால் பழனிசாமி, வெளிப்படையாக நிர்வாகம் நடத்துவதாக அப்பட்டமான பொய் சொல்கிறார். இதை நான் சொல்லவில்லை. நடுநிலையான அறப்போர் இயக்கம் சொல்கிறது. இது போதாது என்று ஆட்சி முடியப்போகும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கோடிவரை ஊழல் செய்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் முதல், அமைச்சர்கள் வரையிலான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும். ஒரு அதிமுக வேட்பாளர் கூட வெற்றி பெறக்கூடாது. அப்படி அவர் வெற்றி பெற்றால் பிஜேபி எம்எல்ஏவாக மாறிவிடுவார். இதை அனைவரும் உணர்ந்து நமது வேட்பாளர்களுக்கு பெரும் வெற்றியை தேடித்தர வேண்டும். நேற்று வெளியான கருத்து கணிப்புகள் கூட, நமது வெற்றியை உறுதி செய்துள்ளது. மக்களின் எழுச்சியும், ஆதரவும் 234 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி பெறும் என்பதை உறுதியாக உணர்த்துகிறது. எனவே கேடு கெட்ட ஆட்சிக்கு பாடம் புகட்ட, வரப்போகும் தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பழனிசாமி ஆட்சியில் யாருக்கும் நிம்மதி இல்லை. போக்குவரத்து ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். புதியதொழில் தொடங்கவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மின்கட்டணம், பால் விலையேற்றத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில் திமுகவின் ேதர்தல் அறிக்ைக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆட்சி மாற்றத்திற்காக மட்டுமல்லாமல் சுயமரியாதை, தன்மானத்தோடு தமிழகம் விளங்கவும், இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாய்ப்பளித்து மாற்றத்தை உருவாக்குங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: