தர்மபுரி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி-செடியிலேயே பழுத்து அழுகும் அவலம்

தர்மபுரி :  தர்மபுரி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் தக்காளியை அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே பழுத்து அழுகும் நிலை உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, காரிமங்கலம், இருமத்தூர், கம்பைநல்லூர், பென்னாகரம், அதகப்பாடி, மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில், சுமார் 7ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தக்காளி அறுவடை செய்யப்படுவதால், அங்குள்ள வியாபாரிகள் தர்மபுரிக்கு வந்து வாங்குவது குறைந்துள்ளது. இதனால் தக்காளி விலை அனைத்து இடங்களிலும் சரிந்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கிலோ ₹4 முதல் ₹6 வரை விற்பனை செய்யப்படுகிறது.

விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் தக்காளியை அறுவடை செய்யாமல், தோட்டத்திலேயே விட்டுள்ளனர்.  இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், அறுவடை கூலி கொடுக்கக்கூட போதிய வருவாய் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தோட்டத்தில் ஒரு கிலோ ₹3க்கு வாங்குகின்றனர். இதனால் ஆட்கள் வைத்து அறுவடை செய்தால், கூலி கொடுக்கக்கூட வருவாய் கிடைப்பதில்லை. இதனால் தக்காளி அறுவடை செய்யாமல் தோட்டத்திலேயே விட்டுள்ளோம்,’ என்றனர்.

Related Stories: