டெல்லியில் போராடுபவர்களுக்கு ஆதரவாக பெங்களூருவில் விவசாயிகள் பிரமாண்ட பேரணி

பெங்களூரு: மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களூருவில் நேற்று விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெங்களூருவில் பிரமாண்ட பேரணி போராட்டம் நடத்த கர்நாடக மாநில ஒருங்கிணைந்த விவசாய சங்கம் முடிவு செய்தது. இப்போராட்டத்தில் விவசாயிகள் ஆயிரக்கணக்கில் சேர்ந்து தங்கள் எதிர்ப்பை காட்டவும் முடிவு செய்யப்பட்டது. இப்போராட்டத்திற்கு கிசான் மோர்ச்சா உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகள், தலித் இயக்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் முழு ஆதரவு ெகாடுப்பதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று பெங்களூருவில் விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர்.

மாநகரின் சிட்டி ரயில் நிலையம் அருகில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சிலை அருகில் இருந்து பெங்களூரு நகரம், பெங்களூரு ஊரகம், துமகூரு, கோலார், ராம்நகரம், சிக்கபள்ளாபுரா ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விதானசவுதா நோக்கி பேரணியாக சென்றனர். பேரணியில் ஒருங்கிணைந்த கிஷான் மோர்ச்சா தேசிய தலைவர்கள் ராகேஷ் டிகாயத், டாக்டர்கள் சுதர்ஷன்பால், யுத்தவீர்சிங், கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர்கள் படகலபுரா நாகேந்திரா, ஜி.சி.பையாரெட்டி, கோடிஹள்ளி சந்திரசேகர், கே.வி.பட் உள்பட பலர் கலந்துகொண்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், கர்நாடக மாநில அரசு ெகாண்டு வந்துள்ள நிலசீர்த்திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.

26ம் தேதி பந்த்

பேரணியில் பேசிய ஒருங்கிணைந்த கிஷான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் டிகாயத் கூறுகையில், மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள 3 வேளாண் சட்டங்களை வாபஸ்பெற வலியுறுத்தி டெல்லியில் கடும் பனி, குளிர், வெயில், மழை என எதையும் பொருட்படுத்தாமல் கடந்த 4 மாதங்களாக லட்சக்கணக்கான விவசாயிகள் காலவரையற்ற தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் உரிமை குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்காமல் உள்ளது. இதை கண்டித்து மார்ச் 26ம் தேதி பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளோம். இதற்கு கர்நாடக மாநில விவசாய சங்க தலைவர்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். பொதுமக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: