நகராட்சிக்குட்பட்ட பல இடங்களில் குழாய் உடைப்பால் தொடர்ந்து குடிநீர் விரயம்-பொதுமக்கள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரில் பல இடங்களில், குழாய் உடைந்து குடிநீர் விரயம் தொடர்வதால், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உண்டாகும் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பொள்ளாச்சியில் கடந்த ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை அடுத்தடுத்து பெய்துள்ளது. இதனால் நீர்நிலைகளிலும், குளம், தடுப்பணை மற்றும் கிணறுகளில் தண்ணீர் தேங்கியிருப்பது அதிகமானது. இதன்பின், இந்த ஆண்டு  துவக்கத்திலிருந்து மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது.

கடந்த ஒரு மாதமாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், குடிநீர் தேவை அதிகமாகி  தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அவலம் உண்டாகிறது.இதில், அம்பராம்பாளையம் வழியாக செல்லும் ஆழியாற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர், அங்குள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்த பின், நகராட்சிக்குட்பட்ட மேல்நிலை தொட்டிகளுக்கு பிரதான குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.

பின் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை, அந்தந்த வார்டு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஆனால், மேல்நிலை தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயானது ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு, அதன் மூலம் குடிநீர் விரயமாவது இன்னும் தொடர்கிறது.அதிலும், மார்க்கெட்ரோடு,வெங்கட்ரமணன்வீதி சந்திப்பு பகுதி, காந்தி மார்க்கெட் நேதாஜி ரோடு,பல்லடம் ரோடு,ஊத்துக்காடு ரோடு உள்ளிட்ட பல இடங்களில்  குழாய் உடைந்து தண்ணீர் விரயமாவது தொடர்ந்துள்ளது. இதில், கரிகால்சோழன் வீதி, நேதாஜி ரோடு உள்ளிட்ட இடங்களில் பல மாதமாக குடிநீர் விரயமாவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. இச்சூழலில், பிரதான குழாயை முறையாக சீரமைத்து சீராக குடிநீர் செல்ல வழி வகை செய்யாமல் இருப்பதால், வரும் கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குழாய்களில், உடைபட்ட இடங்களை கண்டறிந்து சீர்செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: