பயனற்ற இரட்டை இன்ஜின் முடங்கி கிடக்கும் பாஜ அரசு: பிரியங்கா காந்தி தாக்கு

அசாமின் ஜோர்ஹத் தொகுதியில் நடந்த காங்கிரஸ் பிரசார பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று பேசியதாவது: பிரதமர் மோடியின் பிரசாரத்தில் அசாமின் வளர்ச்சிக்கு பாஜ செய்த பணிகள் பற்றி பேசுவார் என்று பார்த்தால், 22 வயது இளம்பெண் (திசா ரவி) டிவிட்டர் பதிவு பற்றி கவலைப்பட்டு பேசுகிறார். அசாம் மக்கள் வெள்ளத்தாலும், சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தாலும் பாதிக்கப்பட்ட போது கவலைப்பட்டீர்களா மோடி? வெள்ளத்தில் மக்கள் மூழ்கிய போது ஏன் நீங்கள் அசாமுக்கு வரவில்லை? பெரிய பெரிய வாக்குறுதி அள்ளிக் கொடுத்து அதை நிறைவேற்றததற்காக என்றாவது கவலைப்பட்டு உள்ளீர்களா? தேயிலை தோட்டத்திற்கு சென்று அங்குள்ள தொழிலாளர்கள் பிரச்னையை கேட்டு இருக்கிறீர்களா?

இரட்டை இன்ஜின் அரசு என்கிறார் பிரதமர் மோடி. இங்கு 2 முதல்வர்கள் ஆளுகிறார்கள். ஒருவர் அதிகாரமிக்க அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றொருவருவர் முதல்வர் சர்பானந்தா சோனாவால், போட்டி முதல்வராக செயல்படுகிறார். இதில் எந்த எரிபொருள், எந்த இன்ஜினை இயக்குகிறதோ தெரியவில்லை. ஆனால், அசாம் அரசு ஓடாமல் முடங்கிக் கிடக்கிறது. கடவுள் தான் உங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: