ரேஷன் கடை ஊழியரை கடத்தி ரூ. 5.15 லட்சம் பறித்தவர் கைது: கள்ளக்காதலிக்கு வலை

தண்டையார்பேட்டை: மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரை சேர்ந்தவர் பாஸ்கரன் (44). கோயம்பேடு சாஸ்திரி நகரில் உள்ள ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த ஜனவரி 7ம் தேதி இரவு பணி முடித்து, சக  ஊழியர் சக்திவேலுடன் கோயம்பேட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்காக ₹8 லட்சம் அரசு பணத்தை தனது கைப்பையில் வைத்திருந்தார்.

வீட்டின் அருகே நடந்து சென்றேபோது, அடையாளம் தெரியாத ஒரு பெண், பாஸ்கரன் மீது இடித்துள்ளார்.  அங்கு வந்த ஆட்டோ டிரைவர் என் மனைவியை ஏன் இடித்தாய் என தகராறு செய்துள்ளார். மேலும், பாஸ்கரனின் கைப்பையில் பணம் இருப்பதை தெரிந்துகொண்ட ஆட்டோ டிரைவரும், அந்த பெண்ணும் பாஸ்கரனை வலுக்கட்டாயமாக  ஆட்டோவில் ஏற்றிச் சென்று, அவரிடமிருந்த ₹8 லட்சத்தில் ₹5 லட்சத்து 15 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் பாஸ்கரன் புகார் செய்தார்.

போலீசார், சம்பவ இடத்தில் உள்ள  சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து, அதில் பதிவான ஆட்டோ நம்பரை வைத்து நடத்திய  விசாரணையில் தேனாம்பேட்டையை சேர்ந்த சர்க்கரை முகம்மது (31), அவரது கள்ளக்காதலி அமுதா (30) ஆகியோர் பணம் பறித்தது தெரிந்தது. தலைமறைவாக இருந்த சக்க்கரை முகமதுவை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அமுதாவை தேடி வருகின்றனர்.

Related Stories: