காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில் 142 பேர் வேட்புமனு தாக்கல்

காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு வேட்பாளரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை. இறுதிநாளான 15ம் தேதி முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களான உத்திரமேரூர் தொகுதிக்கு திமுக சார்பில் மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, அதிமுக சார்பில் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் தொகுதிக்கு திமுக சார்பில் மாநில மாணவரணி செயலாளர் வக்கீல் எழிலரசன், பாமக சார்பில் மகேஷ்குமார் ஆகியோர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து 16ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் மந்தமாகவே இருந்தது. 17ம் தேதி மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் எஸ்கேபி.கோபிநாத், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாமுவேல் சால்டின், சுயேட்சைகள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்னிம் உத்திரமேரூர், காஞ்சிபுரம் தொகுதிகளுக்கு முறையே ஆர்.வி.ரஞ்சித்குமார், மனோகரன் ஆகியோர் அமமுக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இறுதிநாளான நேற்று, மாலை வரை காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு 36 வேட்பாளர்களும், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு 33 பேர்,  ஸ்ரீபெரும்புதூர் (தனி)  தொகுதிக்கு 25 பேர், ஆலந்தூர் தொகுதிக்கு 48 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கு முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்பட மொத்தம் 142 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories: