சித்தூர் கிரீம்ஸ்பேட்டையில் விபத்து ஏற்படும் முன் ஆபத்தான டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர் : சித்தூர் கிரீம்ஸ்பேட்டை பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் எங்கள் பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆரம்ப பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது. நாள்தோறும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகள் இந்த சாலை வழியாக செல்ல வேண்டும்.

ஆனால் சாலை அருகே மிகவும் தாழ்வான பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர். மேலும் டிரான்ஸ்பார்மர்கள் குழந்தைகளின் கைக்கு எட்டும் அளவில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இந்த ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றக் கோரி மாநகராட்சி அலுவலகம் மற்றும் மின்துறை அலுவலகம் ஆகியவற்றில் பல முறை புகார் செய்தும் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த வருடம் இந்த டிரான்ஸ்பார்மரில் பசுமாடு ஒன்று மின்சாரம் தாக்கி உயிரிழந்தது. இதனால் மின்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் தற்காலிக முள்வேலி அமைத்தனர். அந்த தற்காலிக முள் வேளியை சில மர்ம நபர்கள் அகற்றி விட்டனர். தற்போது ஆபத்தான நிலையில் உள்ள இந்த டிரான்ஸ்பார்மரை உடனடியாக வேறொரு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால் உயரத்தில் குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு எட்டாத வகையில்  டிரான்ஸ்பார்மரை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இனியாவது விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: