தேர்தல் விதிமுறை அமலில் உள்ள நிலையில் சின்னசேலம் சட்டமன்ற அலுவலகத்தில் பளிச்சிடும் முன்னாள் அமைச்சர் பெயர்-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சின்னசேலம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் சட்டமன்ற தொகுதியாக இருந்த போது ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சட்டமன்ற அலுவலகம் கட்டப்பட்டது. அந்த சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த உதயசூரியனும், மோகனும் பயன்படுத்தி வந்தனர். அப்போது மோகன் ஊரக தொழில்துறை அமைச்சராக இருந்தபோது சட்டமன்ற அலுவலக முகப்பில் மோகன் என பளிச்சென்று எழுதி உள்ளனர். அதன் பிறகு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கென கள்ளக்குறிச்சி, சங்கராபுரத்தில் சட்டமன்ற அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இதனால் இந்த அலுவலகத்தை யாரும் பயன்படுத்தவில்லை.

 இந்நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளதால் அதிகாரிகள் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் சட்டமன்ற அலுவலகங்களை பூட்டி சீல் வைத்துள்ளனர். எழுதப்பட்டிருந்த பெயர்களும் அழிக்கப்பட்டுள்ளது. ஆனால் சின்னசேலத்தில் உள்ள சட்டமன்ற அலுவலக முகப்பில் உள்ள பெயரை ஊராட்சி நிர்வாகமோ, வருவாய்த்துறை நிர்வாகமோ, பேரூராட்சி நிர்வாகமோ, தேர்தல் நடத்தும் அலுவலரோ அழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்களோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் தோன்றுகிறது.   ஆகையால் அதிகாரிகள் உடனடியாக சின்னசேலம் சட்டமன்ற அலுவலக முகப்பில் உள்ள பெயரை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். 

Related Stories: