கொரோனா தொற்று பரவலை தடுக்க நொய்டாவில் ஏப்.30 வரை 144 தடை உத்தரவு: பண்டிகையின்போது விதிகளை பின்பற்ற போலீசார் அறிவுரை

நொய்டா: பல்வேறு பண்டிகைகள், திருவிழாக்கள் வரவுள்ளதையடுத்து, கவுதம் புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு வரும் ஏப்ரல 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில், ஹோலி, ஷாப்-இ-பராத், புனித வெள்ளி, நவராத்திரி,  அம்பேத்கர் ஜெயந்தி, ராமநவமி, மகாவீர் ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு  கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கவுதம் புத்தா நகர் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

அதோடு, அனுமதியின்றி பொதுகூட்டம் நடத்துவது, கும்பல் கூடுவது உள்ளிட்டவற்யைும் தடை செய்துள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. ஏனெனில், இதுபோன்ற திருவிழாக்கள் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில், சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைக்க சமூக விரோத  சக்திகள் முயற்சிக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே, அவற்றை நிராகரிக்க முடியாது என்பதால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என  கூடுதல்  போலீஸ் துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) அசுதோஷ் திவேதி பிறப்பித்த உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், பொதுவெளியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் தவிர, வேறு யாரும் கைகளில் குச்சிகள், இரும்பு கம்பிகள் மற்றும் வெடிபொருட்கள் போன்வற்றை வைத்துக்கொண்டு சுற்றிவர அனுமதியில்லை.

 

அதேபோன்று, அனுமதியின்றி பேரணிகள், பொதுகூட்டங்கள், உண்ணாவிரத போராட்டங்கள் போன்றவை நடத்தவும், மற்றவர்களை இதுபோன்றவற்றில் ஈடுபடுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்குள் வெடிபொருட்கள், துப்பாக்கிகள் போன்றவற்றை எடுத்துவரக்கூடாது. அலுவலகத்திற்குள் வரும் முன்பாக, நுழைவாயிலில் செக்யூரிட்டி பகுதியில் ஒப்படைத்த பின்னரே உள்ளே வர அனுமதியுண்டு.

இந்த காலகட்டத்தில் திருமணங்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துதல், கொண்டாட்ட நிகழ்வுகளின் போது துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவற்றிற்கும் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீறினால்   வழக்கு தொடரப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

காஜியாபாத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒருபகுதியாக 144 தடை உத்தரவு வரும் மே மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அஜய் சங்கர் தெரிவித்தார். மேலும், இதுகுறித்து மல்டிபிளெக்ஸ், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. முககவசம் அணியாத வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று கடைக்காரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். இதுதவிர, கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வெளியாட்கள் செல்ல அனுமதியில்லை. இந்த கட்டுப்பாடுகள் ஹோலி உள்ளிட்ட பிற பண்டிகைகளுக்கும் பொருந்தும் என்றும், சிலைகளை ஏற்றிக்கொண்டு பேரணி செல்லவும் வாகனங்களுக்கு அனுமதியில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: