காங்கயம்: காங்கயம்-தாராபுரம் ரோட்டில் ஊதியூர் அடுத்துள்ள குண்டடம் பிரிவு முதல் குண்டடம் வரையுள்ள 11 கி.மீ. தூரம் ரோடு அகலப்படுத்தும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக ரோட்டின் ஒரு பக்கத்தில் சுமார் 3 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. அந்த குழியில் கான்கிரீட் கலவை போட்டு நிரப்பி பின்னர் அதன் மேல் தார் மெட்டல் போட உள்ளனர். இந்த பக்கவாட்டு குழிகளில் சில இடங்கள் கான்கிரீட் கலவை கொண்டு நிரப்பாமல் அப்படியே விட்டுவிட்டனர்.
மேலும் ரோடு பணிகளும் கடந்த சுமார் ஒரு மாத காலமாக நடைபெறாமல் நிறுத்தப்பட்டுள்ளது. கான்கிரீட் கலவை கொண்டு நிரப்பப்படாத இடங்களில் வாகன டிரைவர்களை எச்சரிக்கை செய்வதற்காக மண் மூட்டைகளை வரிசையாக வைத்திருந்தனர். அதில் பெருமளவு மூட்டைகள் வாகனங்கள் உரசியதில் குழிக்குள் விழுந்துவிட்டன.