டி20 பேட்டிங் தரவரிசை டாப் 5ல் மீண்டும் கோஹ்லி

துபாய்: சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசையில், இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி மீண்டும் டாப் 5ல் இடம்  பிடித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் டக் அவுட்டான கோஹ்லி அடுத்த 2 போட்டிகளிலும்  அமர்க்களமாக விளையாடி 73* ரன் மற்றும் 77* ரன் விளாசினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்ட டி20 பேட்டிங்  தரவரிசையில் அவர் 1 இடம் முன்னேறி மீண்டும் டாப் 5ல் நுழைந்தார் (744 புள்ளி). இங்கிலாந்து வீரர் டேவிட் மாலன் (894), ஆஸ்திரேலியாவின்  ஆரோன் பிஞ்ச் (830) தொடர்ந்து முதல் 2 இடங்களில் நீடிக்கின்றனர். பாகிஸ்தானின் பாபர் ஆஸம் (801) ஒரு இடம் முன்னேறி 3வது இடத்தில்  உள்ளார். இந்திய வீரர் கே.எல்.ராகுல் (771) ஒரு இடம் பின்தங்கி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான தற்போதைய ஐசிசி தரவரிசையில் டாப் 5ல் இடம் பெற்றிருக்கும் ஒரே  பேட்ஸ்மேன் என்ற பெருமை கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 வீரராக இருக்கும் கோஹ்லி, டெஸ்ட் மற்றும் டி20ல்  5வது ரேங்க் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அரை சதம் அடித்ததன் மூலமாக, சர்வதேச டி20 அதிக அரை சதம்  அடித்த கேப்டன்கள் வரிசையில், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இருவரும் தலா 11 அரை சதம்  அடித்துள்ளனர். கோஹ்லி 41 இன்னிங்சில் 1421 ரன் (அதிகம் 94*, அரை சதம் 11), வில்லியம்சன் 49 இன்னிங்சில் 1383 ரன் (அதிகம் 95, அரை சதம்  11) எடுத்துள்ளனர்.

Related Stories: