அதிகரித்து வரும் கொரோனா தொற்று நஞ்சன்கூடு பஞ்ச மகோத்சவ விழா ரத்து: கலெக்டர் ரோகிணி உத்தரவு

மைசூரு: அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக புகழ்பெற்ற நஞ்சன்கூடு பஞ்ச மகோத்சவ விழாவை இந்த ஆண்டு ரத்து செய்து மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உத்தரவிட்டுள்ளார். மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடுவில் புகழ்பெற்ற நஞ்சுண்டேஸ்வரா கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் 19ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை மகோத்சவ விழா வெகு விமரிசையாக நடத்தப்படும். விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 26ம் தேதி பஞ்ச மகோத்சவ விழாவையொட்டி தேர் பவனி நடைபெறும். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த ஆண்டு பஞ்ச மகோத்சவ விழா நடத்தப்படுமா என்ற குழப்பம் பக்தர்களிடையே ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று கொரோனா தொற்று குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்திய பிறகு கர்நாடக முதல்வர் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு நஞ்சன்கூடு மகோத்சவ விழாவை சம்பிரதாய முறைப்படி எளிமையாக நடத்தவும், பஞ்ச மகோத்சவத்தை ரத்து செய்தும் மாவட்ட கலெக்டர் ரோகிணி சிந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: