ஹரித்துவார் கும்பமேளாவுக்கு செல்லும் யாத்ரீகர்களுக்கு பரிசோதனை கட்டாயம்: டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: ஹரித்வாரில் நடைபெறவுள்ள கும்பமேளாவிற்கு சென்றுவிட்டு திரும்பும் டெல்லிவாசிகளுக்கு கோவிட் -19 க்கான ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும், அவர்கள் தங்களது உடல்நிலையை சுயமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ஆண்டுதோறும் ஹரித்துவாரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு டெல்லியிலிருந்து ஏராளமான யாத்ரீகர்கள் செல்வது வழக்கம். பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் இங்கு குவியத்தொடங்குவார்கள். எனவே, டெல்லியில் இருந்து ஏராளமான யாத்ரீகர்கள் ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி மேளாவிற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பமேளாவிற்கு செல்லும் டெல்லிவாழ் யாத்ரீகர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்கள் குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம்(டிடிஎம்ஏ) விளக்கம் அளித்துள்ளது. இதன்படி, அதிகாரிகள் தெரிவிக்க்கும் கோவிட்-19 வழிகாட்டுதல்களை கும்பமேளாவிற்கு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கோவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு உத்தரகண்ட் அரசு அறிவுறுத்தியபடி, டெல்லியிலிருந்து ஹரித்வார் கும்பமேளாவிற்கு வருகை தருவோர் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.கும்பமேளாவின் போது கோவிட்-19 தொற்றுநோயை தடுக்க சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வழங்கிய நிலையான இயக்க முறைகள்(எஸ்ஓபி) மற்றும் உத்தரகண்ட் அரசு வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களையும் டெல்லியைச் சேர்ந்த யாத்ரீகர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கும்பமேளாவிற்கு வருபவர்கள் அனைவரும் தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார சான்றிதழை கட்டாயம் வழங்க வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே கும்பமேளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்து நெகடிவ் சான்று பெற்றிருக்க வேண்டும். இந்த சான்று கும்பமேளாவிற்கு வருவதற்கு 72 மணிநேரம் முன்பாக பெறப்பட்டதாக இருக்க வேண்டும். கும்பமேளாவிற்கு சென்று திரும்பிய பின்னர் மீண்டும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்து கொண்டு தன்னிச்சையாக தனிமைப்படுத்திக்கொண்டு உடல்நிலையை கண்காணித்துக்கொள்ள வேண்டும்.

ஹரித்துவார் செல்ல விரும்புவோர் உத்ரகாண்ட் அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும். இதுதவிர, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், இரத்த அழுத்தம் சர்க்கரை நோய், இதய நோய் உள்ளவர்கள்,நுரையீரல் மற்றும் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்ட இணைநோய் உள்ளவர்கள் ஹரித்துவார் வருவதை தவிர்க்க வேண்டும். யாத்ரீகர்கள் முகமூடி அணிவது, அடிக்கடி கை கழுவுதல், ஒருவருக்கொருவர் ஆறு அடி உடல் தூரத்தை பராமரித்தல் போன்ற பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: