துவார்க்காவில் பரபரப்பு 76 வயது தாயை நடுத்தெருவில் அடித்து கொன்ற கொடூர மகன்: இணையதளத்தில் வீடியோ வைரல்

புதுடெல்லி: துவார்க்காவில் 76 வயது தாயை நடுத்தெருவில் மகன் அடித்துக்கொன்ற காட்சி வீடியோவில் வைரலாகி வருகிறது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லி துவார்க்காவில் பிந்தாபூர் போலீஸ்நிலைய பகுதியில் வசித்து வந்தவர் அவதார் கவுர்(76). இவரது மகன் ரன்பீர்(45). வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். கடந்த திங்கட்கிழமை பிற்பகல் வீட்டு பகுதியில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக அவதார் கவுருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொ டர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று பேசி முடித்து வைத்தனர். அவர்கள் சென்றபிறகு தாய் அவதார் கவுருக்கும், மகன் ரன்பீர் மற்றும் மனைவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றியதும் நடுத்தெருவில் வைத்து தாயாரை சரமாரியாக ரன்பீர் தாக்கினார். முகத்தில் அறைந்ததால் அவதார் மயக்கமடைந்து தெருவில் விழுந்துவிட்டார். இதையடுத்து உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. பிந்தாபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்து மகன் ரன்பீரை கைது செய்தனர். சிசிடிவி காட்சிகளை பார்த்த போது அவதார் கவுரை மகன் ரன்பீர் அடிப்பது தெரியவந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: