முக கவசம் சோதனை தீவிரம் நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா: 50 மாணவ, மாணவிகளுக்கு சளி பரிசோதனை

நாகர்கோவில்: நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, கல்லூரியில் பயிலும் 50 மாணவ, மாணவிகளிடம் சளி மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது 17 ஆயிரத்து 234 ஆக உள்ளது. சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரப்படி, 16,889 பேர் குணமடைந்துள்ளனர். 84 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். 261 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று புதிதாக 13 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. குமரி - கேரள எல்லையோர பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கிருந்து வருபவர்களிடம் சளி மாதிரி பரிசோதனை நடக்கிறது.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களையும் கண்காணித்து தனிமைப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் கொரோனா தற்போது மீண்டும் உள்ளூர் பகுதிகளில் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. ஒரு பகுதியில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அந்த பகுதியில் குறைந்த பட்சம் 30 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.  மேலும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில் நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் மேற்பார்வையில், சுகாதார ஆய்வாளர்கள் 2 குழுக்களாக பிரிந்து முக கவசம் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்க தொடங்கி உள்ளனர். மேலும் நகை கடைகள், ஜவுளிக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் தீவிரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டு கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறார்கள்.  கல்லூரிகள், பள்ளிகளில் பரவல் அதிகமாகி உள்ளதால், பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளிடம் பரிசோதனை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாணவரின் உடல் வெப்ப நிலை குறிக்கப்படுகிறது.

இதற்கிடையே நாகர்கோவிலில் கல்லூரி முதல்வருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதையடுத்து அந்த கல்லூரியில் மேலும் 50 மாணவர்கள், 10 பேராசிரியர்களிடம்  சளி மாதிரி எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கான பரிசோதனை முடிவு இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் முக கவசம் அணிய வேண்டும்.  பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர்கள் ஆய்வு நடத்தி, கொரோனா விதிமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: