கொலையா..தற்கொலையா?: டெல்லியில் பாஜக மக்களவை எம்.பி. ராம் ஸ்வரூப் தூக்கிட்டு தற்கொலை.. போலீசார் விசாரணை..!!

டெல்லி: பாரதிய ஜனதா கட்சியின் மக்களவை எம்.பி. ராம் ஸ்வரூப் சர்மா டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆர்.எம்.எல். மருத்துவமனை அருகே உள்ள கோமதி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் ஒரு அறையில் இன்று காலை அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. 62 வயதான ராம் ஸ்வரூப் சர்மா, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி தொகுதியின் எம்.பி. ஆவார்.

கடந்த முறையும் இதே தொகுதியில் இவர் வெற்றி பெற்றிருந்தார். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளார்கள். கடந்த சில மாதங்களாக உடல்நலமின்றி ராம் ஸ்வரூப் வேதனைப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இமாச்சல பிரதேசத்தின் ஜோகிந்தர் நகரை சேர்ந்தவரான ராம் ஸ்வரூப். தொகுதி அமைப்பு செயலாளராக இருந்து மாநில அமைப்பு செயலாளராக உயர்ந்தவர்.

இவரது மரணத்தை தொடர்ந்து, இன்று காலை நடக்கவிருந்த பாரதிய ஜனதா ஆட்சி மன்ற குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ராம் ஸ்வரூப் சட்டைப்பையிலோ அல்லது அவரின் அறையிலோ தற்கொலை கடிதம் ஏதும் சிக்கவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் நிகழ்ந்துள்ளதா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: