ராயபுரம் தொகுதியில் தீவிர பிரசாரம் அடிப்படை பிரச்னைக்கு முக்கியத்துவம்: அமைச்சர் ஜெயக்குமார் வாக்குறுதி

சென்னை: சட்டமன்ற தேர்தலையொட்டி ராயபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம் மூலகொத்தலம் 5வது மண்டல அலுவலகத்தில் உள்ள ராயபுரம் தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி பேபியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் அங்கிருந்து ஆதரவாளர்களுடன், வண்ணாரப்பேட்டை சஞ்சீவி ராயன் கோயில் தெருவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து, பேண்ட் வாத்தியம் முழங்க ஊர்வலமாக சென்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். 49வது வட்டத்தில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள், மலர் தூவியும் சால்வை அணிவித்தும் ஜெயக்குமாருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், \”இப்பகுதியில் கழிவுநீர், குடிநீர் பிரச்னை, சாலை வசதி உள்ளிட்டவை சிறப்பாக செய்து தந்துள்ளேன். பல தெருக்களில் சிமென்ட் சாலை அமைத்துள்ளேன். தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைப்பேன். பொதுமக்கள் என்னிடம் பாகுபாடின்றி குறைகளை கூறலாம். அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததுபோல் தொகுதி மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவேன். சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பூங்காக்கள், இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடம், சமுதாய கூடம் உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன். அடிப்படை பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து நிறைவேற்றுவேன்’ என்றார்.

பிரசாரத்தின்போது தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Related Stories: