அமராவதி நில மோசடி விசாரணை சூடுபிடிக்கிறது சந்திரபாபு நாயுடு ஆஜராக சிஐடி போலீசார் நோட்டீஸ்: முன்னாள் அமைச்சருக்கும் சம்மன்

ஐதராபாத்: அமராவதி நில மோசடி வழக்கு விசாரணையில் ஆந்திர முன்னாள் முதல்வரான தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆஜராக சிஐடி போலீசார் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததில் இருந்தே, தெலங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, ஆந்திர மாநில பிரிவினைக்குப் பிறகு, கடந்த 2015ல் அமராவதியில் புதிய தலைநகரம் அமைக்க, முந்தைய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, விவசாயிகளிடம் இருந்து முறைகேடாக நிலம் பெறப்பட்டுள்ளதாக ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ராமகிருஷ்ணா ரெட்டி புகார் அளித்தார். அவர் தனது புகாரில், ‘அரசு தரப்பில் சிலர் விவசாயிகளிடம் பொய் வாக்குறுதி தந்து அவர்களுக்கு எந்த விதமான இழப்பீடு தொகையும் தராமல் விவசாய நிலங்களை வாங்கி மோசடி செய்துள்ளனர்,’ என கூறியுள்ளார். இந்த புகார் தொடர்பாக கடந்த 12ம் தேதி மாநில குற்றப்பிரிவு போலீசார் (சிஐடி) வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த நில முறைகேடு தொடர்பாக விஜயவாடாவில் உள்ள சிஐடி அலுவலகத்தில் வரும் 23ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு சிஐடி போலீசார் நேற்று நோட்டீஸ் கொடுத்தனர்.

சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு சென்ற அதிகாரிகள் அங்கு நோட்டீசை ஒட்டிச் சென்றனர். இதே போல், தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொன்குரு நாராயணாவையும் விசாரிக்க நோட்டீஸ் கொடுத்துள்ளனர். தவறும் பட்சத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வரானதும், அமராவதி தலைநகர நில மோசடி பற்றி விசாரிக்கப்படும் என அறிவித்தார். இப்போது, சந்திரபாபு நாயுடுவுக்கு போலீசார் நோட்டீஸ் கொடுத்ததின் மூலம், இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

* அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை

சிஐடி நோட்டீஸ் குறித்து தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் அச்சன்நாயுடு கூறுகையில், ‘‘இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஆர், ஜெகன் மோகன் ரெட்டி குடும்பம் கடந்த 30 ஆண்டாக கடப்பா மாவட்டத்தில் ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட 700 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் எஸ்டேட் அமைத்து அனுபவித்து வருகிறது. இந்த விஷயம் தெரிந்ததும், 300 ஏக்கர் மட்டுமே அவர்கள் திருப்பி தந்துள்ளனர்,’’ என்றார்.

Related Stories: