கோவை நவக்கரை அருகே ரயிலில் மோதி படுகாயமடைந்த யானையின் உடல் நிலையில் முன்னேற்றம்

கோவை: கோவையில் ரயில் மோதி காயமடைந்த ஆண் காட்டு யானைக்கு சாடிவயல் யானைகள் முகாமில் 2-வது நாளாக தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானையின் பின் பகுதியில் எலும்புகள் உடைந்துள்ளதால் ஆபத்தான நிலையில் இருந்த யானையின் உடல் நிலையில் தற்போது முன்னெற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

 தொடர்ந்து சாடிவயல் கும்மி யானைகள் முகாமில் வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். கோவை மதுக்கரை வனச்சரகம், நவக்கரை பிரிவு, சோளக்கரை பீட்டுக்கு உட்பட்ட ரயில்வே தண்டவாளம் அருகில் திருவனந்தபுரம்- சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி காட்டு யானை அடிப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்து. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது, ரயில்வே தண்டவாளத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் 28 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, தலை மற்றும் பின் பகுதியில் காயம்பட்ட நிலையில் படுத்து கிடந்தது.

கேரள- தமிழக எல்லையில் உள்ள வாளையார் ஆற்றில் தண்ணீர் குடித்துவிட்டு அங்கிருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்த போது கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் 02696) மோதி, யானை படுகாயம் அடைந்திருப்பது தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில், கால்நடை மருத்துவர்கள் குழுவோடு வந்த வனத்துறையினர் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து அங்கு தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டு மருந்துகள் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து யானையின் உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாததால், படுகாயத்துடன் உயிருக்கு போராடும் யானையை ஆலாந்துறை அடுத்த சாடிவயல் கும்மி யானை முகாமிற்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். தொடர்ந்து தர்பூசணி, வெள்ளம், தண்ணீரை உணவாக கொடுத்துள்ளனர். மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தகவல் கூறியுள்ளார். தற்போது அந்த யானையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளார்.

Related Stories: