மியான்மரில் 6 முக்கிய நகரங்களில் ராணுவச் சட்டம் அமல்!: மக்கள் கிளர்ச்சியை தடுத்து நிறுத்த ராணுவம் அதிரடி..!!

யங்கூன்: மியான்மரில் மக்கள் கிளர்ச்சியை தடுத்து நிறுத்த 6 முக்கிய நகரங்களில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மியான்மரில் ஆட்சியை பிடித்துள்ள ராணுவம், ஆங் சான் சூச்சி உள்பட முக்கிய அரசியல் தலைவர்களை வீட்டு காவலில் வைத்துள்ளது. ராணுவத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். மக்களின் போராட்டதை ஒடுக்க ராணுவம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் மியான்மரில் போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று போராட்டக்காரர்கள் மீது ராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் உயிரிழந்தனர்.

ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்களாவர். அவர்களது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். இதுகுறித்து இறந்தவரின் தந்தை ஒருவர் தெரிவித்ததாவது, ராணுவத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளால் எங்கள் புரட்சியை ஒதுக்கிவிட முடியாது. வெற்றி சாத்தியமாகும் வரை போராட்டத்தை தொடர்வோம். என் மகனை சுட்டுகொன்றுவிட்டார்கள். நாட்டுக்காக என் மகன் உயிர் தியாகம் செய்திருக்கின்றான். துப்பாக்கி குண்டுகளுக்கு பிள்ளைகளை பறிகொடுத்த மற்ற பெற்றோரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கும் என தெரிவித்தார்.

இந்நிலையில் மியான்மர் ராணுவத்திற்கு சீனா ஆதரவாக இருப்பதாக கூறி அந்நாட்டில் உள்ள சீன நிறுவனங்களை போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். வன்முறைகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மியான்மர் அரசை சீனா கேட்டுக்கொண்டுள்ளது. இதனையடுத்து யங்கூனில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு டாகூன், பெய்க்கன் உட்பட 6 நகரங்களில் ராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் யங்கூன் முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

Related Stories: