வேளாண் சட்டத்தை எதிர்த்து நீளும் போராட்டம்: டெல்லி எல்லையில் நிரந்தரமான குடியிருப்பை கட்டும் விவசாயிகள்: 2 ஆயிரம் வீடுகளை கட்ட முடிவு

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்னும் நீண்ட நாட்கள்  போராட வேண்டியிருப்பதால், டெல்லி எல்லையில் விவசாயிகள் நிரந்தர  குடியிருப்புகளை கட்டத் தொடங்கி உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த  வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லி திக்ரி உள்ளிட்ட எல்லைகளில்  விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் 107வது நாளை  எட்டியுள்ளது. இதுவரை மத்திய அரசு நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையும்  தோல்வியில் முடிந்தது. அடுத்ததாக பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஆர்வம்  காட்டவில்லை. அதே போல், சட்டங்கள் ரத்து செய்யும் வரை போராடுவதில்  விவசாயிகள் தீவிரமாக உள்ளனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  வெளியேற்ற மின்சாரம், தண்ணீர் சப்ளை நிறுத்துதல், இன்டர்நெட் முடக்குதல்  போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதையெல்லாம் தாண்டி,  டெல்லியின் கடும் குளிரும் டிராக்டர்களையே குடியிருப்பாக மாற்றி விவசாயிகள் 3  மாததிற்கும் மேலாக தாக்குப் பிடித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தற்போதைய நிலையில் போராட்டம் இன்னும் நீண்ட நாட்களுக்கு  நீளும் என்பதால் திக்ரி, குண்ட்லி எல்லைளில் நெடுஞ்சாலை ஓரம் செங்கல்,  சிமென்ட்டுடன் நிரந்தர வீடுகளை கட்டத் தொடங்கி உள்ளனர். கிசான் சோசியல்  ஆர்மி என்ற விவசாய அமைப்பு, இக்குடியிருப்புகளை கட்டித் தருகிறது. இந்த  அமைப்பை சேர்ந்த அனில் மாலிக் கூறுகையில், ‘‘இந்த வீடுகள் வலிமையானது.  விவசாயிகளின் மன உறுதி போன்று இந்த வீடுகள் நிரந்தரமானவை. ஏற்கனவே, 25  வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இது போன்று 1,000 முதல் 2,000 வீடுகளை வரும்  நாட்களில் கட்ட உள்ளோம்,’’ என்றார்.  ஒரு வீடு கட்ட ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25  ஆயிரம் வரை விவசாயிகள் செலவிடுகின்றனர். வீடு கட்ட தேவையான  மூலப்பொருட்களுக்கு மட்டும் பணம் பெற்றுக் கொள்ளப்படுகிறது. கூலிச் செலவை  கிசான் சோசியல் ஆர்மி அமைப்பு ஏற்றுக் கொள்கிறது. விவசாயிகள் கூறுகையில்,  ‘‘அறுவடை காலம் என்பதால் டிராக்டர்களை அனுப்ப வேண்டியது அவசியமாகி  விட்டது. எனவே, இதுபோன்ற நிரந்தர குடியிருப்புகள் தற்போதைய நிலையில்  அத்தியவாசிமாகி உள்ளது,’’ என்றனர்.

பாரத் பந்த்தில் வர்த்தக அமைப்புகளும் பங்கேற்பு

விவசாயிகள் போராட்டம் தொடங்கி 4 மாதத்தை நிறைவு செய்வதையொட்டி, வரும்  26ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்த் நடத்த விவசாய அமைப்புகள் முடிவு  செய்துள்ளன. இந்த பந்த் போராட்டத்தில் வர்த்தக அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: