பாஜ முதல்வரை முற்றுகையிட்ட விவகாரம்: பஞ்சாப் எம்எல்ஏக்கள் மீது அரியானாவில் வழக்கு

சண்டிகர்: அரியானா முதல்வரை முற்றுகையிட்ட விவகாரத்தில் பஞ்சாப் எம்எல்ஏக்கள் மீது அரியானாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரியானா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன் மாநில சட்டசபைக்கு சென்றார். அப்போது அவரை பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் வழிமறித்தனர். அவர்கள், மத்திய அரசின் விவசாய சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அரியானாவில் வேளாண் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றும் கோஷங்களை எழுப்பி முதல்வரை முற்றுகையிட்டனர். அதனால், சட்டப்பேரவை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், அரியானா மாநில சட்டமன்ற சபாநாயகர் கயான் சந்த் குப்தா தலைமையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில உள்துறை செயலாளர் ராஜீவ் அரோரா மற்றும் காவல்துறைத் தலைவர் மனோஜ் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில், முதல்வரின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், முதல்வரை முற்றுகையிட்ட பஞ்சாப் மாநில சிரோன்மணி அகாலி தளம் எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது.

அதையடுத்து, சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் பஞ்சாப் சட்டமன்றக் கட்சித் தலைவர் சரஞ்சித் சிங் தில்லான், முன்னாள் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா, எம்எல்ஏக்கள் சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை பஞ்சாப் - அரியானா மாநில அதிகாரிகளின் கூட்டுக்குழு சண்டிகரில் விசாரிக்கும். மேலும், இவ்விவகாரம் குறித்து நாளை மறுநாள் (மார்ச் 15) அரியானா சட்டமன்றத்திலும் விவாதிக்கப்படும் என்று பேரவை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories: