புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்நாள் யாரும் வேட்பு மனு செய்யவில்லை

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது. ஆறு தொகுதிகளிலும் முதல்நாளில் ஒருவரும் மனு தாக்கல் செய்யவில்லை.தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மார்ச் 19ம் தேதி முடிவடைகிறது. ஏப்.6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை(தனி) தொகுதிக்கு கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகமும், விராலிமலை தொகுதிக்கு இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகமும், புதுக்கோட்டைக்கு புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுலகமும், திருமயத்துக்கு திருமயம் வட்டாட்சியர் அலுவலகமும், ஆலங்குடிக்கு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகமும், அறந்தாங்கிக்கு அறந்தாங்கி சார் ஆட்சியர் அலுவலகமும் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகமாக செயல்படுகிறது.

இந்த அலுவலகங்களில்தான் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுவோர் வேட்புமனுக்களை தாக்கல் செய்வர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு தொடக்க நாளான நேற்று 6 இடங்களிலும் அதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் இருந்தன.

இந்த அலுவலக வளாகங்கள் துணை ராணுவம், துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. பொதுமக்களையும் பரிசோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.மேலும், அங்கிருந்கு குறிப்பிட்ட தூரம் முன்னதாகவே போலீசாரை நிறுத்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக வருவோர் விதிகளை மீறி யாரேனும் செயல்படுகின்றனரா எனவும் கண்காணிக்கப்பட்டனர். இதுதவிர, ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டனர். எனினும், ஒருவர்கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

Related Stories: