ஏர்வாடி அருகே புனித நீராடும் இடத்தில் கடலரிப்பு: படித்துறை அமைக்க கோரிக்கை

கீழக்கரை: ஏரான்துறையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதால், புனிதநீராட பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஏர்வாடி அருகே ஏரான்துறை கடற்கரையில், மாயாகுளம், சின்ன மாயாகுளம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக புனித நீராட கூடிய இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவிற்கு கடல் அரிப்பு அதிகமாக ஏற்பட்டு கடல்நீர் உள்ளே புகுந்தது. இதனால் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பனை, தென்னை மரம் அனைத்தும் வேரோடு சாய்ந்து கடற்கரை ஓரத்தில் கிடக்கின்றன.

மேலும் ஏரான்துறை கடற்கரைக்கு வரும் தார்ச்சாலை முழுவதும் மண் அரிப்பாலும், கடல்நீர் அரிப்பாலும் சேதமடைந்துள்ளது. தரையிலிருந்து 5 அடி உயரத்தில் தார்ச்சாலை தொங்கிக் கொண்டிருக்கிறது. கோயில் திருவிழா, அமாவாசை உள்ளிட்ட தினங்களில் பக்தர்கள் புனித நீராடுவார்கள். இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கடற்கரைக்கு கடல் அரிப்பைத் தடுக்கும் விதமாக பக்கவாட்டு தடுப்புச்சுவர்களை அமைத்திட வேண்டும். மற்றொன்று கடலில் இறங்கி நீராடும் வகையில் படித்துறையை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: