பிரித்வி ஷா அதிரடியில் மும்பை அபார வெற்றி: அரை இறுதிக்கு தகுதி

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் கால் இறுதியில் சவுராஷ்டிரா அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி அரை இறுதிக்கு முன்னேறியது. பாலம் ஏ மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்தது. அவி பரோட் 37, ஸ்நெல் படேல் 30, விஷ்வராஜ் 53 ரன் எடுத்தனர். சமர்த் வியாஸ் 90 ரன் (71 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்), சிராக் ஜனி 53 ரன்னுடன் (38 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய மும்பை அணி 41.5 ஓவரிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 285 ரன் எடுத்து அபாரமாக வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. யாஷஸ்வி ஜெய்ஷ்வால் 75 ரன் (104 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். கேப்டன் பிரித்வி ஷா 185 ரன் (123 பந்து, 21 பவுண்டரி, 7 சிக்சர்), ஆதித்யா தாரே 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

டெல்லி ஏமாற்றம்: ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த  மற்றொரு கால் இறுதியில் உத்தரப் பிரதேச அணியுடன் மோதிய டெல்லி அணி 46 ரன் வித்தியாசத்தில் தோற்று வெளியேறியது. டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச, உ.பி. அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 280 ரன் குவித்தது. கேப்டன் கரண் ஷர்மா 83, உபேந்திரா யாதவ் 112, சமீர் 43* ரன் விளாசினர். டெல்லி அணி 48.1 ஓவரில் 234 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஹிம்மத் 39, ராணா 21, லலித் யாதவ் 61, அனுஜ் ராவத் 47, கேப்டன் சங்வான் 26 ரன் எடுத்தனர். உபேந்திரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாளை நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் குஜராத் - உத்தரப் பிரதேசம், கர்நாடகா - மும்பை அணிகள் மோதுகின்றன. இறுதிப் போட்டி 14ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories: