ஒரே வாக்காளர் இரு இடங்களில் வாக்களிப்பதை தடுக்க நடவடிக்கை: தமிழக, புதுச்சேரி கலெக்டர்கள் ஆலோசனை

புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதனை தொடர்ந்து புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடந்தது.

புதுச்சேரி மாவட்ட கலெக்டர் பூர்வாகார்க் தலைமை தாங்கினார். விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர சாகமூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி பிரதிக்‌ஷா கொடாரா, விழுப்புரம் எஸ்பி ராதாகிருஷ்ணன், கடலூர் எஸ்பி  அபிநவ், விழுப்புரம் கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், புதுச்சேரி துணை கலெக்டர்கள் சுதாகர், சக்திவேல், முகமதுமன்சூர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை ஒட்டியுள்ள புதுவை எல்லை கிராமங்களில் வசிப்போரில் பலருக்கு வாக்குரிமை புதுவையில் உள்ளது. ஆனால் குடும்ப அட்டையை தமிழகத்தில் வைத்துள்ளனர். இவர்கள் ஒரு இடத்தில் மட்டும் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும். மது, சாராயம் கடத்தலை தடுக்க 3 மாவட்ட அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். கடத்தல் நபர்களை பிடிக்கும்போது, எங்கிருந்து வந்தது என்ற தகவலை பரிமாறிக்கொண்டால், மேற்கொண்டு அந்த பகுதியிலிருந்து கடத்தலை தடுக்க முடியும்.

தேர்தல் அமைதியாக நடைபெற ரவுடிகளை முன்கூட்டியே கண்காணித்து கைது செய்ய வேண்டும். புதுவை எல்லைப்பகுதி மதுபானக்கடைகளில் மது விற்பனை, இருப்பு நிலவரங்களை கண்காணித்து முறைப்படுத்தி கடத்தலை தடுக்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் அதிகாரிகளை தொடர்புகொண்டு செயல்பட வேண்டும் என கலந்தாலோசனை நடத்தினர். இதுகுறித்து விழுப்புரம் கலெக்டர் அண்ணாதுரை கூறியதாவது: சட்டப்பேரவை தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக 3 மாவட்ட அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினோம். இதில் துறைசார்ந்த ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 3 மாவட்ட பகுதிகளிலும் சாராயம், மதுக்கடத்தலை தடுப்பது, ரவுடிகள் நடவடிக்கையை கண்காணிப்பது, தேர்தல் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசித்தோம்.

புதுவை, தமிழக எல்லை பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தேர்தல் விதிகள்படி ஒரு இடத்தில் மட்டும் வாக்களிப்பதை உறுதி செய்ய விரலில் மை வைப்பதை கண்காணித்து, இரு இடங்களில் வாக்களிப்பதை தடுக்க நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளை செய்து அமைதியான, நேர்மையான தேர்தல் நடப்பது உறுதி செய்யப்படும். சோதனைச்சாவடிகளில் துணை ராணுவத்தினருடன் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படும். ரூ.10 லட்சக்கு மேல் இருந்தால், வருமான வரி துறைக்கு தகவல் தெரிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: