நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு பொக்லைனை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்: நல்லம்பள்ளி அருகே பரபரப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே தடங்கம் ஊராட்சி, இருளர்கொட்டாய் கிராமத்தில் சிப்காட் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலத்தை, பொக்லைன் மூலம் சமன் செய்யும் பணியில், அதிகாரிகள்  தலைமையில் பணியாளர்கள் நேற்று ஈடுபட்டனர்.  அப்போது, அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்கி விட்டு, அதன் பின்னர் நிலத்தை சமன்  செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்களது விவசாய நிலத்தை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என கோரி, பொக்லைனை சிறைபிடித்து, அதன் முன் பாய்ந்தும் படுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய  போராட்டம், 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்தது. தகவல் அறிந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கோரிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்போது தற்காலிகமாக நிலம் சமன் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்படும் என்றும் போலீசார் உறுதி அளித்தனர். இதனை  தொடர்ந்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: