இளம்பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்பிக்கும் மையங்கள் உருவாக்க வேண்டும்-பவ்டா துணைத்தலைவர் கோரிக்கை

விழுப்புரம் :  பவ்டா நிறுவனம் 1985ம் ஆண்டு தொடங்கப்பட்டு, மாட்டு வண்டி தொழிலாளர்கள், மகளிர், இளைஞர்கள் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை இந்தியாவின் தென் மாநிலங்களில் செய்து வருகிறது. 1989- 1990 ஆண்டுகளில் இருந்து பவ்டா மகளிர் வளர்ச்சிக்கான திட்டங்களை, ஏற்படுத்தி, குறிப்பாக மகளிர் மன்றங்கள் ஏற்படுத்தி அகில உலக மகளிர் தினத்தில் ஊர்வலம், கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள், மாநாடுகள் மூலம் அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் மகளிர் சார்ந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டுள்ளது.

 இந்த ஆண்டு மகளிர் தினமும் சட்டமன்ற தேர்தலும் சேர்ந்த காலக்கட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்: பெண்கள், முதியவர்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஊர்க்காவல் படை அமைக்க வேண்டும். பெண்கள், மாணவிகள் மற்றும் வளர் இளம்பெண்கள் தங்களை காத்துக்கொள்ள தற்காப்பு கலைகளை கற்பிக்கும் மையங்களை ஒன்றியம் மற்றும் நகர அளவில் உருவாக்க வேண்டும்.  

 பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க இளங்கலை, முதுகலை பட்டம் படித்த ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு கட்டாயம் வேலைவாய்ப்பு வழங்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு நகர, கிராம வளர்இளம் பெண்களுக்கும் மாதம் ஒரு முறை சமுதாய வளர்ச்சி, சுய முன்னேற்றம் ஆகியவை குறித்த ஆலோசனைகள் வழங்க தொண்டு நிறுவனங்களையும் பணி ஓய்வு பெற்ற ஆசிரியைகளையும் நியமித்து நல்வழிகாட்ட அரசு முன் வர வேண்டும்.

 மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் மதுக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பவ்டாவின் துணை தலைவர் அல்பினாஜாஸ், ரோஸ்மலர் டெவலப்மெண்டல் கோ ஆப்ரேட்டிவ் சொசைட்டி லிமிடெட், தலைவர் பிரபலா ஜெ.ராஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Related Stories: