மஞ்சூர்-கோவை சாலையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகள்: வனத்துறை எச்சரிக்கை

மஞ்சூர்: மஞ்சூர் கோவை சாலையில் குட்டியுடன் காட்டு யானைகள் நடமாடி வருவதால் வாகனங்களில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரித்துள்ளது. மஞ்சூர், கெத்தை அருகே முள்ளி பகுதியை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், உணவு மற்றும் குடிநீர் தேடி இங்கிருந்து ஏராளமான காட்டு யானைகள் இடம் பெயர்ந்து தமிழக பகுதிகளில் ஊடுருவியுள்ளது.

இந்த யானைகளும் கெத்தை, முள்ளி, மானார், அத்திகடவு உள்ளிட்ட பகுதிகளில் நடமாடி வருவதுடன் சாலையில் ஆங்காங்கே நின்று அவ்வழியாக வரும் அரசு பஸ்கள், வாகனங்களை வழிமறித்து வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் காட்டு யானை குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. கடந்த சில நாட்களாக யானைகள் குட்டியுடன் இந்த சாலையில் நடமாடி வருகிறது.  குட்டியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில்,`சாலைகளில் காட்டு யானைகளை கண்டவுடன் வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்த வேண்டும். பயணிகள் கீழே இறங்கி யானைகளை கண்டு கூச்சலிடுவது மற்றும் புகைப்படம் எடுக்க முயற்சி செய்யக்கூடாது. மேலும், வாகனங்கள் மூலம் யானைகளை பின் தொடர்தல், அவற்றை விரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட கூடாது. காட்டு யானைகள் சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: