அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்: சுசீந்திரத்தில் அமித்ஷா பேச்சு

கன்னியாகுமரி: சுசீந்திரம் நகர மக்களிடம் “வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக அமித்ஷா பிரசாரம் செய்தார். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித்ஷா கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று பிரசாரம் செய்தார். இதற்காக அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் வந்தார்.

நாகர்கோவில் மறவன் குடியிருப்பு போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் வந்திறங்கிய அவரை பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து சுசீந்திரம் நகர மக்களிடம் ‘‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பாரதிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். பிரசாரத்தில் ஈடுபட்ட அமித்ஷா பேசியதாவது;  சுசீந்திரத்தில் உள்ள வீடுகளுக்கு சென்று பாரதிய ஜனதாவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வினியோகித்தோம்.

கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் பொன். ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவதை உறுதி செய்யுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சிகளின் கூட்டணியே வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார். குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட வெளிமாவட்ட போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அமித்ஷா சென்ற சாலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. வேப்பமூடு பகுதியில் அமித்ஷாவை பாரதிய ஜனதா தொண்டர்கள் செண்டைமேளம் முழங்க வரவேற்றனர்.

Related Stories: