தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்காக நடந்த எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து: சொந்த மாவட்டங்களில் பணிபுரிய அனுமதி

நாகர்கோவில்:  தமிழ்நாடு முழுவதும் எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். சொந்த மாவட்டத்தில் பணியாற்றும் டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இதே போல் சொந்த மாவட்டத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ.க்களும் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இது காவல்துறையினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தேர்தல் வாக்கு சாவடிக்குள் பணியில் இருக்கும் வருவாய்த்துறை, கல்வித்துறையை சேர்ந்தவர்களை இடமாற்றம் செய்யாத தேர்தல் ஆணையம், காவல்துறையினரை மட்டும் தூக்கியடித்து பழி வாங்குவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

காவல்துறையினரின் இந்த அதிருப்தி தேர்தல் ஆணையத்தை எட்டியது. இதையடுத்து தற்போது சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றத்தை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சொந்த மாவட்டங்களில் பணியாற்றும் எஸ்.ஐ.க்களை இடமாற்றம் செய்ய வேண்டாம். சொந்த தொகுதியில் பணியில் இருந்தால் மாற்றுங்கள் என கூறி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களிலும் 241 சப் இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு உத்தரவிட்டு இருந்தார்.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய 4 துணை போலீஸ் சரகங்களில் இருந்தும் 70 எஸ்.ஐ.க்கள் இடமாற்றம் செய்யப்பட்டு இருந்தனர். இதே போல் ஆயுதப்படையில் 6 பேரும் மாற்றப்பட்டு  இருந்தனர். இவர்களுக்கு பதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி  மாவட்டங்களில் இருந்து எஸ்.ஐ.க்கள், குமரி மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால், இந்த நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஏற்கனவே பணியில் இருந்த காவல் நிலையங்களில் பணியாற்றிட அனுமதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: