காஸ், பெட்ரோல் விலை விர்ர்ர்... சாமானிய மக்கள் உர்ர்ர்...வாடிப்போன இலை, பூ கட்சிகள்

நாகர்கோவில்: காஸ், பெட்ரோல் விலை உயர்வால் இல்லத்தரசிகள், இரு சக்கர வாகன ஓட்டுனர்கள், ஒட்டு மொத்த பொதுமக்களை விட இப்போது மிகவும் கதி கலங்கி நிற்பது அதிமுகவும், பாஜவும்தான் (இலையும், பூவும்தான்). கடந்த சட்டமன்ற தேர்தலில் சுமார் ஒன்றரை சதவீதம் வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியமைத்த அதிமுக, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா அணி - ஓபிஎஸ் அணி என பிரிந்து, பிறகு பாரதிய ஜனதா கட்டப்பஞ்சாயத்து நடத்தி இபிஎஸ் - ஓபிஎஸ்சை சேர்த்து வைத்தது. இடையில் தினகரன், சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு இதில், தினகரன் ‘அமமுக’ என்று தனி ஆவர்த்தனம் செய்து வருகிறார்.முதல்வர் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு ஆரம்பத்தில் இருந்தே, நித்ய கண்டம் பூரண ஆயுசு என தினமும் செத்து செத்து பிழைத்துக் கொண்டிருந்தது.

அப்பாடா ஒரு வழியாக 4 ஆண்டுகளை கடந்து விட்டோம் என்று பெருமூச்சு விட்ட நேரத்தில், சிறையில் இருந்து விடுதலையான சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என ஒரு குண்டைத் தூக்கி போட்டார். இதனால், அதிமுக மேலிடம் ஆடிப்போனது. இந்நிலையில், சசிகலா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார்.இப்படி, அதிமுகவுக்கு தொடர்ந்து பிரச்னை இருந்து வரும் நிலையில், சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. மேலும், எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என பகீரத பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில், பாஜ, பாமக, தேமுதிக இருந்தது. இந்தக் கூட்டணியே சட்டமன்ற தேர்தலில் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டில் ஆரம்பத்தில் இருந்தே, பாஜ, பாமக, தேமுதிக குடைச்சல் கொடுத்துக் கொண்டு வந்தது. ஒருவழியாக அவசர கோலத்தில் வன்னியர்களுக்கு பத்தரை சதவீத உள் இடஒதுக்கீடு என அறிவித்தும், வேறு வகையிலும் பாமகவை அதிமுக சரிக்கட்டி விட்டது. ஆனால், இன்னும் பாஜ, தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு இழுபறியாகத்தான் உள்ளது.

இதுஒரு புறமிருக்க இந்த முறை சட்டமன்றத்தில் ‘எப்படியாவது’ கால் பதித்தே ஆக வேண்டும் என பாரதிய ஜனதா பகீரதப் பிரயத்தனம் செய்து வருகிறது. ஆனால், நீட் தேர்வு, மூன்று வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டம், இந்தி - சமஸ்கிருத திணிப்பு, விலைவாசி உயர்வு என பல்வேறு விஷயங்களில் மத்திய மாநில அரசுகள் மீது தமிழகத்தில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது.இந்நிலையில், பிப்ரவரி மாதத்தில் மட்டும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, 3 முறை உயர்த்தப்பட்டு ரூ.100 விலை அதிகரிக்கப்பட்டது. பிப்ரவரி 4ம் தேதி நாடு முழுவதும் 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலையை 25 அதிகரிக்கப்பட்டது. இதனால் சென்னையில் 710க்கு விற்கப்பட்ட மானியமில்லா சிலிண்டர் 25 அதிகரித்து 735 ஆனது. 2வது முறையாக பிப்ரவரி 15ம் தேதி காஸ் சிலிண்டர் விலை 50 உயர்த்தப்பட்டது. இதனால் சென்னையில் 735க்கு விற்கப்பட்ட நிலையில், 50 உயர்ந்து 785 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

மேலும், பிப்ரவரி 25ம் தேதி 3வது முறையாக காஸ் சிலிண்டர் விலை திடீரென 25 உயர்த்தப்பட்டுள்ளது.  வீட்டு உபயோக மானியமில்லா சிலிண்டர் விலை சென்னையில் 785க்கு விற்கப்பட்ட நிலையில், 25 உயர்ந்து 810 ஆக நிர்ணயிக்கப்பட்டது.அதாவது, வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிப்ரவரி மாதம் 4ம் தேதி 25ம், 15ம் தேதி 50ம், 25ம் தேதி 25ம் உயர்த்தப்பட்டதால், பிப்ரவரி மாத விலையேற்றம் என்பது 100 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நடப்பு மாதத்தில் 1ம் தேதி வீட்டு உபயோக மானியமில்லா காஸ் சிலிண்டர் விலை திடீரென 25 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் 810க்கு விற்கப்பட்ட நிலையில் கடந்த 1ம்தேதி 25 உயர்ந்து 835 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களை கடுமையாக பாதிப்படைய செய்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகளுக்கு தாங்க முடியாத இன்னல்களை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலை தினமும் 25 காசு முதல் 40 காசு வரையில் உயர்த்தப்படுவதால், அதன் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத நிலையில், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்களில் சில மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100ஐ எட்டிவிட்டது. தமிழகத்தில் 94ஐ எட்டியிருக்கிறது. டீசல் விலையும் வடமாநிலங்களில் 90ஐயும், தமிழகத்தில் 86ஐயும் கடந்துள்ளது.

இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்துள்ளது. மக்களின் அன்றாட தேவையாக விளங்கும் காய்கறி உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசலை தொடர்ந்து காஸ் சிலிண்டரின் விலை உயர்வு, அதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றால், தமிழக மக்கள் தாங்கவொணா துன்பத்தில் உள்ளனர். காஸ் உள்ளிட்ட எரிபொருள் பயன்படுத்தாமலே பொதுமக்கள் ‘கொதித்துப்’ போயிருக்கின்றனர்.  கொரோனா ஊரடங்கு பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில், அவர்களின் மீது மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து சுமையை ஏற்றி வருவதால், இந்த தேர்தலில் பாஜவுக்கும், அதிமுகவுக்கும் பாடம் கற்பிக்க தயாராகி விட்டனர் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால் அதிமுக, பாஜ இரண்டு கட்சிகளும் கதி கலங்கி உள்ளனர்.

குறிப்பாக, குமரி மாவட்டத்தில் எம்.பி. தொகுதி உட்பட ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அ.தி.மு.க., பா.ஜ. இந்த முறை எப்படியாவது ஜெயித்தே ஆக வேண்டும் என்று மனப்பால் குடித்து கொண்டிருந்த வேளையில், காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்களின் எதிர்ப்பு அவர்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் மட்டும், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை, 3 முறை உயர்த்தப்பட்டு ரூ.100 விலை அதிகரிக்கப்பட்டது.ஒரு லிட்டர் பெட்ரோல் தமிழகத்தில் 94ஐ எட்டியிருக்கிறது. டீசல் விலை தமிழகத்தில் 86ஐ கடந்துள்ளது.

Related Stories:

>