ஆண்டிபட்டியில் 10 ஆண்டுக்கும் மேலாக கிடப்பிலே கிடக்கும் நெசவு பூங்கா பணி-நெசவாளர்கள் வாழ்வில் விடியல் எப்போது?

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் விலக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ள வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி அருகேயுள்ள சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் கிராமங்களில் ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் உள்ளனர். இப்பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி, விசைத்தறிகள் செயல்பட்டு வருகிறது. 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் நெசவு தொழிலை முழுநேர தொழிலாக செய்து வருகின்றனர்.

இங்கு நெசவாளர்கள் விசைத்தறி கூடங்களிலும், அவரது சொந்த வீடுகளிலும் தறி அமைத்து உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் விசைத்தறி மூலமாக பல்வேறு உயர்ரக காட்டன் சேலைகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இப்பகுதி நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2004ம் ஆண்டு அப்போதை மாநில அரசு டி.சுப்புலாபுரம் விலக்கு பகுதியில் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நெசவு பூங்கா அமைக்க உத்தரவிட்டது. இதற்காக உடனே அப்பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலம் கையகபடுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் ரூ.105 கோடியில் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கியது.

வைகை உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா என்று பெயரிடப்பட்ட இந்த பூங்காவிற்கு மத்திய அரசு 40 சதவீதமும், மாநில அரசு 9 சதவீதமும் நிதி வழங்குவது என்றும், மீதமுள்ள 51 சதவீத பங்கை நெசவு பூங்காவின் பங்குதாரர்கள் வங்கிகளின் உதவியுடன் வழங்குவது என்றும் திட்டமிடப்பட்டது. அதன்படி மாநில அரசின் பங்களிப்பு தொகையான ரூ.4 கோடியே 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த தொகை தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய அரசின் பங்களிப்பான 40 சதவீத நிதி கடந்த 10 ஆண்டுகளாக ஒதுக்கீடு செய்யப்படாததால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த பங்குதாரர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதுகுறித்து இப்பகுதி நெசவாளர்கள் தெரிவிக்கையில், ‘டி.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள நெசவு பூங்காவை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்களும் பார்வையிட்டு சென்றனர். அப்போது திட்டத்தை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

ஆனால் இதுவரை எந்த ஒரு நிதியும் ஒதுக்கவில்லை. பங்குதாரர்களின் பங்களிப்பால் சில கட்டிடங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது. அதுவும் பணிகள் முழுமை பெறவில்லை. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். எனவே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தல் வாக்குறுதியாகவே இருக்கும் இந்த திட்டத்தை நிறைவேற்றி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>