கம்பத்தில் பழுதான சாலையால் பரிதவிக்கும் வாகனஓட்டிகள்

கம்பம் : தேனி மாவட்டத்தில் கம்பம் நகராட்சி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர்கள், 1000க்கும் மேற்பட்ட போர் வீலர் வாகனங்கள் உள்ளன. தவிர கம்பத்தை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைக்கு கம்பத்திற்கு வருகின்றனர்.

மேலும் புகழ்பெற்ற தேக்கடி, சுருளி அருவியை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கம்பம் வழியாக பயணிக்கின்றனர். இதனால் கம்பத்தில் நாளுக்குநாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கு அதற்கேற்றாற்போல் தரமான சாலை வசதி இல்லை. கம்பம் மெயின்ரோட்டில் தனியார் திருமண மண்டபம் அருகே சாலை முழுவதும் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாவதுடன் அடிக்கடி விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத்துறையினர் இதுபோன்ற சேதமடைந்த சாலைகளை பேஜ்ஒர்க் மட்டும் செய்வதுடன் நிறுத்தி விடாமல் முறையாக சரிசெய்ய வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: