விவசாயிகளுக்கு ஆதரவானவர்களை மத்திய அரசு மிரட்டுகிறது!: டாப்சி, அனுராக் காஷ்யப்-பின் வீட்டில் நடந்த ரெய்டு குறித்து ராகுல்காந்தி விமர்சனம்..!!

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை வருமான வரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு மிரட்டி பணியவைக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இந்தி திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான அனுராக் காஷ்யப், இயக்குனர் விகாஷ் பேல் உள்ளிட்டோர் இணைந்து கடந்த 2011ம் ஆண்டு பாண்டம் பிலிம்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பின்னர் 2018ல் மூடிவிட்டனர்.

இந்நிலையில் பாண்டம் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு நடைபெற்றிருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் அனுராக் காஷ்யப், டாப்ஸி ஆகியோரது மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இருவருமே தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருபவர்கள் என்பதால் இந்த வருமானவரி சோதனை அவர்களை மிரட்டுவதற்காக திட்டமிட்டு நடத்தப்படுவதாக பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் மத்திய அரசின் விருப்பத்திற்கு இணங்க வருமானவரித்துறை செயல்பட்டு வருகிறது. வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வு அமைப்புடன் இணைந்து மத்திய அரசு இதனை செய்து வருகிறது. விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதராக செயல்படுபவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி வருமானவரித்துறை சோதனை மூலம் மிரட்டி வருகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: