உ.பி.யில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை சுட்டுக்கொலை: நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவு

ஹத்ராஸ்: உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தையை, அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண்ணின் தந்தையை சுட்டுக் கொன்றவர் கௌரவ் சர்மா என தெரியவந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக அவர் 2018ல் சிறையில் அடைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கௌரவ் மீது பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் தந்தை புகார் பதிவு செய்திருந்தார்.

எனினும் கௌரவ் சர்மா கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குள் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். பெண் மற்றும் கௌரவ் குடும்பங்கள் தற்போதும் ஒருவருக்கொருவர் விரோதமாக உள்ளனர். அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கௌரவ் ஆத்திரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்த வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: