ஜோதிடத்தால் நேர்ந்த விபரீதம்!: 5 வயது குழந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற தந்தை கைது..!!

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தந்தையால் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட 5 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்னிலத்தை சேர்ந்த ராம்கி என்பவர் அண்மையில் ஜோதிடம் பார்த்ததாக தெரிகிறது. அப்போது அவருடைய 5 வயது மூத்த மகன் சாய்சரனுக்கும், அவருக்கும் ஆகாது என்று ஜோதிடர் கூறியதால் குழந்தையை அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவரது மனைவிக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீண்டும் தகராறு ஏற்பட்ட போது தனது மூத்த மகன் சாய்சரண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி ராம்கி எரித்தார்.

இதில் படுகாயமடைந்த குழந்தை சாய்சரனுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ராம்கியை போலீசார் கைது செய்து மன்னார்குடி சிறையில் அடைத்தனர். ஜோதிடத்தால் பெற்ற மகனையே தந்தை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கை என்ற பெயரில் பெற்றோர்கள் இவ்வாறு நடந்துகொள்வது எப்போது முடிவுக்கு வரும் என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.

Related Stories:

>