தஞ்சை அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு குல்லா அணிவித்து அவமதிப்பு

தஞ்சை: தஞ்சை அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலைக்கு காவி துண்டு, குல்லா அணிவித்து அவமதித்துள்ளது திகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரி அருகே மூன்று சாலை சந்திப்பில் தந்தை பெரியாரின் முழு உருவசிலை உள்ளது. நேற்று காலை அவ்வழியாக வந்த மக்கள் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, தலையில் குல்லா வைத்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த திக மாவட்ட செயலாளர் அருணகிரி மற்றும் திகவினர் திரண்டனர். பின்னர் அவர்கள் துண்டு, குல்லாவை அகற்றியதுடன் குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கேயே கோஷமிட்டனர்.

தகவலறிந்து வந்த ஒரத்தநாடு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பெரியார் சிலைக்கு துண்டு போர்த்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக, திகவினர் ஒரத்தநாடு போலீசில் புகார் அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசுவது, செருப்பு மாலை போடுவது, காவி துணி போடுவது போன்ற செயல்கள் தொடர்ந்து வருகிறது. போலீசார் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறி விசாரணையை விட்டுவிடுகின்றனர். இதில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: