தமிழகம் நாட்டின் வழிகாட்டி; காமராஜர் முயற்சியால் தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம்: ராகுல் காந்தி பேச்சு

கன்னியாகுமரி: தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி எம்பி இன்று கன்னியாகுமரி பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மறைந்த கன்னியாகுமரி எம்பி வசந்தகுமார் நினைவிடத்தில் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார். வசந்தகுமாருக்காக கட்டப்பட உள்ள மணி மண்டபத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து வசந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார். பின்னர் கன்னியாகுமரி சர்ச் பகுதியில் காரில் நின்றபடியே பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்; தமிழ் மொழி, கலாச்சாரம், நாகரீகத்திற்கு மோடி அரசு மரியாதை கொடுக்கவில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளை பழனிசாமி அரசு நிறைவேற்றவில்லை.

தமிழக முதல்வர் மிகப்பெரிய உழல்வாதியாக இருக்கிறார்; அவரை மோடி மிரட்டுகிறார். தமிழ் கலாச்சாரத்தை அடிமைப்படுத்த நினைக்கும் ஆர்எஸ்எஸ், மோடிக்கு தேர்தலில் மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும். ஒரு இந்தியனாக தமிழ் மொழி, கலாச்சாரத்தை காக்க வேண்டியது என் கடமை என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்;  தமிழகம் இந்தியாவுக்கு வழிகாட்டும் மாநிலம். நேற்று நான் கவனித்ததில் காமராஜர்தான் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய முதல் இந்திய குடிமகன். அந்த நேரத்தில் இந்திய பொருளாதார மேதைகள் இலவச மதிய உணவு கொடுத்தால், பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றார்.

ஆனால் காமராஜர் பொருளாதார நிபுணர்கள் சொன்னதை கேட்காமல், மக்கள் சொன்னபடி மதிய உணவு வழங்கினார். காமராஜர் முயற்சியால் தமிழகம் மாட்டுமல்லாது இந்தியா முழுவதும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த பெருமை காமராஜரை சாரும். அதுதான் தமிழகம் நாட்டின் வழிகாட்டி என கூறினேன் என கூறினார்.

Related Stories: