மிரட்டும் சுங்க கட்டணம்... பாஸ்டேக் பகல் கொள்ளை: வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்

வரிகளை கட்டியே வாழ்க்கையை தொலைத்து வருகிறான் இந்திய குடிமகன். குறிப்பாக நடுத்தர மக்களின் முன் எத்தனையெத்தனை வரிகள் அணிதிரண்டு நின்று மிரட்டுகின்றன. ஜிஎஸ்டி, தொழில் வரி, வருமான வரி... என அதன் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் வாகனப் போக்குவரத்துக்காக மட்டும் கணிசமான தொகையை இழக்க வேண்டியிருக்கிறது. வாகனங்கள் வைத்திருப்போருக்கு இரண்டாவது பெரும் சுமையாக இருந்து மிரட்டுவது சுங்கக் கட்டணம்.  முதல் சுமையை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை - பெட்ரோல், டீசல் எனும் எரிபொருள் பூதம் தான். தமிழகத்தில் உள்ள 2.77 கோடி சரக்கு மற்றும் போக்குவரத்து வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிப்பது வழிப்பறி போல நடக்கிறது. நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்தும் திட்டம் தனியாருக்கு விடப்பட்டதில் இருந்து கட்டணக்கொள்ளை அதிகரித்தபடி இருக்கிறது. உருவாக்கு - சொந்தமாக்கி கொள் - செயற்படுத்து - ஒப்படை என்கிற முறையில் சாலைப் பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனியார்மயப்படுத்தியது.

சுங்கம் வசூலிக்கும் உரிமை அந்நிறுவனங்களுக்கு 15 ஆண்டுகள் வழங்கப்பட்டன. இந்த உரிமக் காலம் பின்னர் 30 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டது.  சாலை அமைப்பது, அதை பராமரிப்பது இதன் பணி. ஆனால் நடைமுறையில் அப்படி நடப்பதே இல்லை என்பது சாலைகள் இருக்கும் லட்சணத்தை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். அப்படி செய்திருந்தாலும் அந்த செலவினங்களை விட பல மடங்கு ஆதாயத்தை பார்த்துவிட்டன தனியார் நிறுவனங்கள். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாடு முழுவதும் 566 சுங்க சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்கச் சாவடிகள். ஆண்டுக்கொரு முறை சுங்கக் கட்டணம் 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஏப்.1ம் தேதியும் மற்ற பகுதிகளில் செப்டம்பர் 1ம் தேதியும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் பெரும்பாலானவற்றின் ஒப்பந்த காலம் காலாவதி ஆகிவிட்டது. அடிப்படை வசதிகள் கூட சாலைகளில் ஏற்படுத்தி தருவதில்லை. ஆனாலும் சுங்கக் கட்டணம் மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. சுங்கக் கட்டண முறையில் தமிழகம் குறிவைத்து சுரண்டப்படுகிறது என அரசியல் கட்சி தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர்.

தமிழக தேசிய நெடுஞ்சாலை, நீளத்தில் நாட்டிலேயே 7-வது இடத்திலும் சுங்க கட்டண வசூல் தொகையில் நான்காவது இடத்திலும் உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 15,456 கி.மீ. அதன் டோல்கேட் எண்ணிக்கை 45. வருமானம் 2,700 கோடி. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை நீளம் 6,634 கி.மீ. அதன் டோல்கேட் எண்ணிக்கை 48. வருமானம் 2,400 கோடி. தமிழகத்தை சுற்றிவளைத்து சுங்க சாவடி வேலிகளை போட்டு வைத்திருப்பது இதிலிருந்தே தெரிகிறது என்கின்றனர். சுங்க கட்டண கொள்ளையின் மற்றொரு பரிமாணமாக பாஸ்டேக் முறை இப்போது உருவெடுத்துள்ளது. 2014ம் ஆண்டே பாஸ்டேக் அறிமுகமானது என்றாலும் நாடு முழுவதும் கடந்த 16ம் தேதி தான் கட்டாயமாக்கப்பட்டது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரட்டிப்பு கட்டணம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டது.

சுங்கச் சாவடிகளில் காத்திருப்பதை தவிர்க்கவும், சாவடி ஊழியர்களுடன் கட்டணத் தகராறு போன்ற சிக்கல்களை நீக்கவும் எரிபொருள் சேமிப்பு, மாசு குறைவு,  வேகமான பயணம், மின்னணு பரிவர்த்தனை ஆகிய அம்சங்களும் பாஸ்டேக்கின் சாதகங்கள் என அரசு  கூறுகிறது. ஆனால் நடைமுறை சிக்கலோ இதற்கு நேர்மாறாக உள்ளன. உதாரணமாக பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட முதல் நாளில் சென்னைக்கு அருகே உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் கூட்டம் அலைமோதியது. குழப்பமும், தகராறுகளும் வழக்கத்தை விட அதிகமாக இருந்தன. தமிழகம் முழுவதும் உள்ள 48 சுங்கச் சாவடிகளில் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பிப்ரவரி 16ல் 9.1 லட்சம் வாகனங்கள் கடந்தன. இதில் 6.98 லட்சம் வாகனங்கள் (76%) மட்டுமே பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்தின.

ரீசார்ஜ் செய்த பின்பும் பாஸ்டேக் கணக்கில் தொகை காட்டப்படவில்லை, பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தும் ஸ்கேனர் சரியில்லாத காரணத்தால் கட்டாயமாக இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது போன்றவை தான் பெரும்பாலான வாகன ஓட்டிகளின் புகார்களாக இருந்தன. இன்றளவும் இப் புகார்கள் தொடர்கின்றன. ஆனால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதையெல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் பாஸ்டேக் மூலம் அதிகரித்து வரும் சுங்க வரி குறித்த பெருமித அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டுள்ளது. ‘டோல்கேட் கட்டண வசூலில் இந்த வாரம் தினமும் 100 கோடி ரூபாய்க்கும் மேலாக இருந்து வருகிறது. பிப்ரவரி 25ம் தேதி 64.5 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகள் உடன் பாஸ்டேக் மூலமான டோல்கேட் கட்டண வசூல் அதிகபட்ச அளவாக 103.94 கோடி ரூபாயை தொட்டது’’ என டிவிட்டரில் பெருமைப்பட்டுள்ளது. ஆனால் இப் பதிவுக்கு மக்கள் காட்டமான எதிர்வினைகளை ஆற்றி வருகின்றனர். பாஸ்டேக் குளறுபடிகளை பட்டியலிட்டு பதிவிட்டு வருகின்றனர். இதற்கு எந்த பதிலும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் இருந்து வருவதில்லை.

தனிமனித பாதிப்பையும் தாண்டி கடுமையான விலைவாசி உயர்வுக்கும் காரணமாக இருக்கும் இந்தக் குளறுபடிகளைக் களையாவிட்டால்... வானம் பொழிகிறது, பூமி விளைகிறது, உனக்கு ஏன் கொடுப்பது கிஸ்தி... என்று மக்கள் ஒருகட்டத்தில் பொங்கி எழுவதை தவிர்க்க முடியாது. மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 15,456 கி.மீ. அதன் டோல்கேட் எண்ணிக்கை 45. வருமானம் 2,700 கோடி. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை நீளம் 6,634 கி.மீ.

அதன் டோல்கேட் எண்ணிக்கை 48. வருமானம் 2,400 கோடி.

தொடர்கதையாகும் சுங்க சாவடி மோதல்

சுங்க சாவடிகளில் கட்டண உயர்வு காரணமாக நாடு முழுவதும் கிட்டத்தட்ட நாள்தோறும் மோதல்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் நடந்த மோதல்களின் பட்டியல்:

* மதுரை திருமங்கலம் இடையே ஐயப்ப பக்தர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடையே கட்டண விவரம் தொடர்பாக ேமாதல் ஏற்பட்டது.

* செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் பாஸ்டேக் இல்லாத தேமுதிக நிர்வாகிகளின் வாகனங்களிடம் 2 மடங்கு கட்டணம் ேகட்டதால் இரண்டு பூத் அடித்து நொறுக்கப்பட்டது.

* கிருஷ்ணகிரி, அத்திப்பள்ளி சுங்கச்சாவடியில் பாஸ்டேக் வேலை ெசய்யாததால் கட்டணம் ரொக்கமாக கட்டினர். திடீரென பாஸ்டேக் ேவலை செய்ததால் மீண்டும் கட்டணம் கேட்டு டிரைவருக்கு அடி. 6 பேர் கைது.

* மைசூரு கோட்கோலா பகுதியை சேர்ந்த உள்ளூர் மக்கள் பாஸ்டேக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து டோல் பிளாசா ஊழியர்களிடம் மோதினர்.

* பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்ட பின்னர் கேரளாவில் பாம்பாம்பள்ளம், பாலியகரா, கும்பாளம் ஆகிய பகுதிகளில் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. காரணம் பெரும்பாலான அரசு பஸ்கள் பாஸ்டேக் சிஸ்டத்தின் கீழ் கொண்டுவரப்படாததால், அவற்றை டோல்பிளாசா ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.

* ஜம்முவில் டோல்கேட் கட்டணம் தொடர்பாக 2 இளைஞர்கள் லக்கன்பூர் டோல்பிளாசாவை அடித்து காலி செய்தனர்.

* ஜலந்தர் ேலாத்தோவால் டோல் பிளாசாவை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அடித்து நொறுக்கியது.

* மதுராவில் டோல் பிளாசா கட்டணம் கேட்டதால் ஆத்திரமடைந்த போலீஸ்காரர் ேடால்பிளாசாவை உடைத்து நொறுக்கினார்.

* சுங்கச்சாவடி கட்டணம் தொடர்பாக செங்குறிச்சி சூறையாடப்பட்டது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சியினர் கைதாகினர்.

* புழல் செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியை தாக்கியதாக தனியார் நிறுவன ஊழியர்கள் 6 பேர் கைது.

என்னதான் பாஸ்டேக்

வண்டியின் முன் கண்ணாடியில் ஒட்டப்படும் பாஸ்டேக் ’ (FASTag) ஸ்டிக்கர் மூலம் ஒவ்வொரு முறை சுங்கச்சவடியை வாகனம் கடக்கும்போது தானாக சுங்கக்கட்டணம் கழிக்கப்படும். இதற்கான ஆப்-ஐ டவுன்லோடு செய்து அதில் வங்கிக்கணக்கை இணைத்து ரீசார்ஜ் செய்யவேண்டும். இதில் போஸ்ட் பெய்டு, ப்ரீபெய்டு என இரு முறையும் உண்டு. பாஸ்டேக் ஸ்டிக்கரில் வாகனத்தின் பதிவெண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பார்கோடு இருக்கும். சுங்கச்சாவடியில் உள்ள ஆன்டெனாவால் இது டிகோட் செய்யப்பட்டு பாஸ்டேக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை கழித்துக்கொள்ளப்படும். சுங்கச்சாவடிகளில் அனைத்து வழித்தடங்களும் பாஸ்டேக் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கான வழியாக இருக்கும். ரேடியோ-அதிர்வெண் அடையாளம் (RFID) மூலம் பாஸ்டேக் செயல்படுகிறது.

பாஸ்டேக் முறையால் வருவாயை இழக்கிறோம் :-ரகுநாதராஜா (கப்பலூர் சிட்கோ தொழிலதிபர் சங்கத்தலைவர்)

டோல்கேட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாஸ்டேக் முறையை தேவையில்லாத ஒன்றாகவே வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். டோல்கேட்டில் நீண்டவரிசையில் வாகனங்கள் தேங்கி நிற்பதை தவிர்க்கும் நோக்கில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வாகனங்கள் டோலை கடக்கும் போது வங்கிகணக்கிலிருந்து நேரடியாக பணம் எடுப்பது பாஸ்டேக் முறையாகும். இதனால் வரிசையில் நிற்கதேவையில்லை என்கின்றனர். ஆனால், பல நேரங்களில் பாஸ்டேக் முறையால் பண இழப்பு  ஏற்படுகிறது. நமது பாஸ்டேக் அக்கவுண்ட்டில் ஒரு குறிப்பிட்ட தொகை ஏற்றி வைத்திருப்போம். பல டோல்கேட்டுகளை கடந்து வரும்போது, அக்கவுண்ட்டில் பணம் குறைந்து விட்டால், இருமடங்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, சென்னையிலிருந்து மதுரைக்கு வருவதற்குள் பல பகுதிகளில் டோல்கேட்டுகளை கடக்கவேண்டும். இதில் கடைசியாக உள்ள டோல்கேட்டை கடக்கும் போது 80 ரூபாய்க்கு பதிலாக 70 ரூபாய் மட்டுமே நமது கணக்கில் பண இருப்பு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அக்கவுண்ட் லாக் ஆகிவிடும். டோல்கேட்டை கடக்க இயலாது. அக்கவுண்ட் லாக் ஆனதால் டோல்கேட் கட்டணம் இருமடங்கு அதாவது 160 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். இப்படி அடிக்கடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது மட்டுமல்ல, சர்வர் பிரச்னையும் அடிக்கடி வருகிறது. தொழில்துறையினர் மட்டுமல்ல, சாதாரண பொதுமக்களும் மிகவும் பாதிக்கின்றனர். எனவே குளறுபடிகளை களைந்து பாஸ்டேக் முறையை சரியான முறையில் செயல்படுத்த நடவடிக்கை எடு்க்க வேண்டும்.

Related Stories: