அரசு ஊழியர்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்திய அதிமுக அரசு: 10 ஆண்டுகளாக ஏமாற்றியதாக புகார்

மதுரை: பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு ஊழியர் அமைப்புகள் கடைசிக்கட்டமாக நடத்திய போராட்டத்தை அதிமுக அரசு கண்டுகொள்ளவில்லை. 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஏமாற்றி விட்டனர் என அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, புதிய பென்ஷன் திட்டத்தை அதிமுக அரசு நடைமுறைப்படுத்தியது. மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசுத்துறை ஊழியர்களும் கோரிக்கை வைத்தனர். 2011 சட்டமன்ற தேர்தலின்போது பழைய பென்ஷன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சட்டமன்றத்திலும், 110வது விதியில் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், 10 ஆண்டுகள் ஆகியும், அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கடைசி கட்ட போராட்டமாக பிப். 2 முதல் தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம், சிறைநிரப்பும் போராட்டம் நடத்தினர். ஆனால், போராட்டத்தை அரசு  கண்டுகொள்ளவில்லை. சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் கோரி முற்றுகை உள்ளிட்ட பல்வேறு போராட்டத்தை நடத்தினர். அங்கன்வாடி ஊழியர்களும் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.

அனைத்து போராட்டத்தையும் அதிமுக அரசு ஏன் என்று கூட கேட்கவில்லை. இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் நல்ல அறிவிப்பு வரும் என பல்வேறு துறையின் அரசு ஊழியர் அமைப்புகள் எதிர்பார்த்து காத்திருந்தனர். கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இது குறித்து அரசு ஊழியர்கள் கூறுகையில், ‘‘புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நிறைவேற்றுவதாக நம்ப வைத்து கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு எமாற்றிவிட்டது’’ என்று கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Related Stories:

>