மனைவியை பிரித்து விட்டதாக கூறி கத்தியால் குத்தி சாமியார் கொலை: தொழிலாளி கைது

பூந்தமல்லி: மனைவியை பிரித்து விட்டதாக கூறி சாமியாரை கத்தியால் குத்தி கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(56). அதே பகுதியில் ஆதிபராசக்தி அங்காள பரமேஸ்வரி ஆலயம் என்ற கோயில் வைத்து, பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். இவரது வீட்டின் அருகில் வசிக்கும் கட்டிட  தொழிலாளி திருமலை(38), கடந்த 18ம் தேதி ராஜேந்திரனை சரமாரியாக கத்தியால் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், ராேஜந்திரனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், திருமலையை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து மதுரவாயல் காவல்  நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், திருமலை தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதுடன், தனது மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு அடித்து உதைத்துள்ளார். இதனால், திருமலையின் மனைவி கடந்த சில  தினங்களுக்கு முன், கணவருடன் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால் திருமலை மன உளைச்சலில் இருந்துள்ளார். அவரை, அருகில் உள்ள சாமியார் ராஜேந்திரனிடம் குறி கேட்க உறவினர்கள் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, தனது மனைவி கோபித்துக்  கொண்டு செல்ல இவர் தான் காரணம் எனக்கூறிய திருமலை, மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேந்திரனை குத்தியது தெரியவந்தது. இதையடுத்து, திருமலை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமியார் ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.  இதையடுத்து, போலீசார் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக பதிவு செய்தனர். மேலும், திருமலையை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>